தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை-
தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பான 100 கோடி ரூபாய் அபராதம், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகிவற்றை நீதிபதி குமாரசாமி இரத்து செய்து இன்றுகாலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சுமார் 3 நிமிடங்கள் மாத்திரமே வாசித்த நீதிபதி குமாரசாமி, அங்கிருந்து எழுந்து சென்றார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின் போயஸ் கார்டனில் குழுமியிருந்த ஜெயலலிதா ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியு;ளளனர். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் மற்றும் பெங்களுர் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, போயஸ் கார்டன் முன்னிலையில் அதிக பொதுமக்கள் கூடியுள்ளதையடுத்து அங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களின் பிறந்ததின விசேட நிகழ்வு-
ஜனநாயக மக்கள் காங்கிரஸ், கூட்டு முன்னணி தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களின் 57ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலில் இன்றுகாலை 10.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த விசேட நிகழ்வின் பிரதம விருந்தினராக நாகராஜக் குருக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், புளொட் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச்செயலர் சுரேஸ் கெங்காதரன், தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு நிர்வாக செயலாளர் மொகமட் பௌமி, ஜனநாயக தேசிய முன்னணியின் உப தலைவர் முல்லை ரகுநாதன், கொழும்புத் தமிழ்ச் சங்க பிரமுகர் பி.எம். கந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மஹிந்தவிடம் நட்டஈடு கோரி நிதியமைச்சர் வழக்கு-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை நித்திரை விட்டு தெளிவான நிலையில் கருத்து வெளியிடுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் ரவி கருணாநாயக்க கேட்டுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷமீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணியிடம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி நிறைந்த அபிவிருத்தி திட்டங்கள் சிலவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் நாடு திரும்பும்போது கைதுசெய்ய உத்தரவு-
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றில் ஆஜராகாதிருந்த குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள தேரர் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் ஞானசார தேரர் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு கோட்டாபய மனு தாக்கல்-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவின்மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சஜீன் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்-
நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இன்று அவரை கைது செய்திருந்தனர். இதையடுத்து அவரை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோது அவரை எதிர்வும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலக வாகன முறைகேடுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் உள்ளிட்ட மூவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து பாராளுமன்றத்தை கலைக்க அழுத்தம் கொடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். பிரதமராகி 40 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ரணில் விக்ரமசிங்க நடத்தும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவென மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் குணரத்ன கூறியுள்ளார். நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டே மேயர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பிணை-
கோட்டே மேயர் ஜானக்க ரணவக்க, எதிர்க்கட்சி தலைவர் யுகத் அப்புஹாமி ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கைகலப்பையடுத்து இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவ்விருவரையும் தலா 10, ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவித்துள்ளார். தனியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திகொண்டிருந்த போது கோட்டே மேயர் ஜானக்க ரணவக்க தன்மீது தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் யுகத் அப்புஹாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, எதிர்க்கட்சி தலைவரே அச்சந்தர்ப்பத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியதாக மேயர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தந்தை செல்வா தினத்தில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் கௌரவிப்பு-
தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் கொழும்பு கிளை கொழும்பு விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் தந்தை செல்வாவின் தினத்தினை கடந்த 26.04.2015 அன்று நிகழ்த்தியது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும், சிறப்பு விருந்ததினராக மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கனேசன் அவர்களும், கௌரவ விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் அவர்களது சேவையைப் பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை தந்தை செல்வா விருதும் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வேலணை வேணியன், கணித ஆசான் தளையரட்ணம், சண் குகவரதன் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.