யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலைய மாணவியின் இறுதி ஊர்வலம்
உயிரிழந்த யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலைய மாணவியின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது அதில் பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புங்குடுதீவு பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ள மாணவி சிவயோகநாதன் வித்யாவின் மரணம் தொடர்பில் 3 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மாணவி கொல்லப்படுவதற்கு முன்னர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உறவினர்களும் ஊர் மக்களும் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த மாணவியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, புங்குடுதீவில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. இதில் அரசியல் தலைவர்கள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு புங்குடுதீவில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பை புங்குடுதீவு இளைஞர் கழகம் விடுத்திருந்தது.
வித்யாவின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மாணவிகள் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கிளிநொச்சி யாழ்ப்பாணம் அகிய இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியிருக்கின்றனர்.