வில்பத்து சரணாலய பகுதியில்  பிக்குகள் ஆர்ப்பாட்டம்

vilpattuஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வில்பத்து சரணாலய காட்டுப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அத்துமீறி காடுகளை அழித்து குடியேறியிருக்கின்றார்கள் என்று தென் பகுதியில் பிரசாரத்தைத் தொடர்ந்து சிஹல இராவண பலய உள்ளிட்ட பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகள் குழுவொன்று அந்த சரணாலயத்தின் எல்லைப்புறப் பிரதேசமாகிய மறிச்சுக்கட்டி பகுதிக்கு பேருந்துகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதனால் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பபட்டிருந்தது.
காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றிருந்த பௌத்த பிக்குகள் அந்தப் பகுதியை தமது பிரதேசம் என கோஷமிட்டு உரிமை கோரியதுடன், அங்கு அரச மரக்கன்று ஒன்றையும் நாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில் இந்தப் பகுதியில் சரணாலய காட்டுப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்களையும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் குடியேற்றியிருக்கின்றார்கள் என தென்பகுதியில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றசாட்டையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவில் அரச உயர் மட்டக் குழுவொன்று இந்தப் பகுதிக்கு கடந்த வாரம் விஜயம் செய்து உண்மை நிலைமைகளை விசாரித்து ஆராய்ந்து அறிந்து சென்றிருக்கின்றது.
இதன்போது மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் எந்தவிதமான அத்துமீறல் குடியேற்றங்களும் இங்கு இடம்பெறவில்லை என்றும் இடம்பெயர்ந்திருந்த மக்களே மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூர் காணி தொடர்பான அரசின் அறிவித்தலுக்கு நீதிமன்றம் தடை

sampurஇலங்கையின் கிழக்கே சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தொழிற்சாலையை அமைக்கவிருந்த சிறீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012-ம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக அந்த நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
சம்பூர் மக்கள் சுமார் 9 ஆண்டுகளாக சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் இருக்கின்றனர்
தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமக்கு பெருநட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறீலங்கா கேட்வே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலை ரத்துசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
குறித்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு வரும் 21-ம் திகதி வரை தடை விதித்துள்ள நீதிமன்றம் அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு விளக்கம் அளிக்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்காக திருப்பிக் கொடுப்பதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் அரச அதிகாரி மீது தாக்குதல்

easten uni attackதமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு நாட்டில் தடையேதும் இல்லை என்று புதிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிங்கள மாணவர்களினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரச அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான பத்தக்குட்டி சுமன் தன்மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஓலிக்கப்பட்டதன் காரணமாகவே தன் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.உயர்கல்வி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுடன் செங்கலடி பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி நிறைவின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் முடிவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஆத்திரமுற்ற நிலையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.

பின்னர் அந்த மாணவர்கள் சிங்கள மொழியிலும் தேசிய கீதத்தை ஓலிக்கச் செய்ததாகவும் நிகழ்வின் பின்னர் வெளியேறிச் சென்றவேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கள மொழியில் பேசியவர்களே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்திய முக்கிய நபரொருவரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் பத்தக்குட்டி சுமன் கூறினார்.

தேசிய கீதம் ஒலிப்பது தொடர்பான பிரச்சனையே தாக்குதலுக்கு காரணம் என்று தமது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறினார்.

இலங்கையில் நீண்டகாலமாக தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வந்த நிலையிலும் கடந்த அரசாங்கக் காலத்தில் சிங்கள மொழியில் மட்டும் ஒலிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வந்திருந்தன.எனினும் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு நாட்டில் தடையேதும் இல்லை என்று புதிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.