குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்- புளொட்-

ploteபுங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

அப்பாவி மாணவி வித்தியாவின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை எந்த விதத்திலும் தப்பிக்கவிட முடியாது. குற்றவாளிகள் தப்புவதற்கு எவரும் எந்தவிதத்திலும் உதவகூடாது என்பதுடன் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட இடந்தரக்கூடாது.

இத்தகைய மிலேட்சத்தனமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்காக வாதாடுவதற்கு முன்வரும் சட்டத்தரணிகள்கூட இவ்வாறான சமூகவிரோதக் செயல்களுக்கு துணை புரிபவர்களாகவும் அதனை ஊக்குவிப்பவர்களாகவுமே சமூகத்தால் கணிக்கப்படுவர்;.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் எமது சமூகத்தின் நலன்கருதி வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து தங்களது முழுப்புலமையையும் செலுத்தி இலவசமாக வழக்காடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது, இன்று தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, பாலியல் துஷ்பிரயோகங்கள், போதைவஸ்து பாவனை போன்ற விடயங்களில் ஈடுபடுவர்களுக்கு ஒரு சரியான பாடமாக அமையும் என்பதுடன் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான ஒரு ஆரம்பமாகவும் அமையும்.

இதேவேளை மாணவி வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையுடன் கூடிய படுகொலையை எதிர்த்து எமது மக்கள் எழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து நிற்பது நிச்சயமாக வருங்காலத்தில் இவ்வாறான சமூகவிரோதச் செயல்கள் நடைபெறாதிருப்பதற்கு ஒரு ஏதுவாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஸ, விமல் வீரவன்ச ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு-

gotabaya......முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலமளித்துள்ளார். லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காகவே முன்னால் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரியவருகின்றது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று வாக்குமூலம் பதிவு செய்கின்றது. அவரது மனைவியான சஷி வீரவங்ச போலி கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தயாரித்தமை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஷீ வீரவங்ச போலி கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை தயாரித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல், எராஜ் பெர்னாண்டோவுக்கு பிணை-

basilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று கடுவல நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பொலிஸார் வசம் இருந்த சந்தேகநபர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கைதுசெய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த வழக்கு இம் மாதம் 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கெஹலிய றம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை-

4565இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியத்தில் இருந்து 990,000 ரூபாவை செலவுசெய்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பி.ஐ பைப் 600 கொள்வனவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியை பயன்படுத்தியதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு 24 சாட்சியாளர்கள், 15 ஆவணங்கள் கொண்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோரை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய 50,000 ரூபா ரொக்க பிணையிலும் 25 லட்சம் பெருமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவித்து உத்தரவிட்டார். கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவில் சிகிச்சைக்கு செல்வதால் ஏனைய இருவரினது கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீண்டும் செப்டம்பர் 2ம்திகதி விசாரணைக்கு வருகிறது.

சம்பூர் காணி பிரச்சினை தொடர்பில் உணவுத் தவிர்ப்பு-

sampurசம்பூர் பிரதேச காணி தொடர்பில் நேற்று முன்தினத்தில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தவராசா பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்து இன்று பொதுமக்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தவராசா பிரேம்குமார், சம்பூர் மக்களின் காணிப் பிரச்சினைக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.