அமைச்சர்கள் நால்வர் பதவி விலகல்-
புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான அமைச்சர்கள் நால்வர் பதவி விலகியுள்ளனர்.. டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாராச்சி, சீ.பி ரத்நாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர்கள் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். டிலான் பெரேரா வீடமைப்பு மற்றும் சமூர்த்தி ராஜாங்க அமைச்சராகவும், மகிந்த யாப்பா நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், சி பி ரட்நாயக்க அரச நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான ராஜாங்க அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி சுற்றாடல் ராஜாங்க அமைச்சராகவும் பதவிவகித்தனர். உள்ளுராட்சி சபைகளில் நிர்வாக காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் தாம் எதிர்காலத்தில் மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுவரும் என பிரதி அமைச்சர் டிலான் பெரோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
மாணவி படுகொலைச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்-
யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜூன் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாணவி படுகொலை சம்பவம் தொடர்பில் முதலில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பபட்டனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன் 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர் வெள்ளவத்தையில் சுவிஸ் பிரஜையும் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியதுடன் சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவியின் உடல் கூற்றும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது அத்துடன், சந்தேகநபர்கள் அனைவரும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனையில் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படும் எவரும் தப்ப முடியாது. அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.
மாணவி படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால், பரவலான கைதுகள்-
யாழ். புங்குடுதீவு மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஐக்கிய வர்த்தக சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் இதனை மேற்கொண்டிருந்தனர். மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் பூரண கரத்தால் நடைபெற்ற வேளையில் பத்திரிகையின் ஊடகவியலாளர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முக்கியஸ்தர், மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் ஒருவர் உட்பட பலர் கைது செய்யபட்டு பின்னர் 11.30மணியளவில் விடுவித்ததாக தெரியவருகின்றது. இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலும் இன்று முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வன்முறை தொடர்பில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-
நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை, சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணி வாகனம் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொருக்கப்பட்டமை, கல்வீச்சு தாக்குதல் நடாத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்த்தப்பட்டு நேற்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 129 பேரும் இன்றைய தினம் 3 கட்டங்களாக யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று யாழ். நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தப்பட்ட 129 பேரில் முதல் கட்டமாக கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 43 பேருக்கு எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரையும், 2ஆம் கட்டமாக கொண்டுவரப்பட்ட 39பேருக்கு 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.