வடக்கின் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்-

police ...யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர, சீதாவாக்கபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.கே.ஜயலத் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர யாழ் மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.டி.வீரசிங்க கிளிநொச்சியில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ.பி. பெர்னாண்டோ மன்னாரில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ. சேனாரத்ன யாழ் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரன்தெனிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். மேலும் ஊர்காவல்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கிவ்.ஆர்.பெரேரா, மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.ஆர்.கே.பி.பாலசூரிய வவுனியா பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.யூ.கே.வுட்லர் யாழ் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவும் இடமாற்றம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாலி செல்வதற்கு முயன்ற யாழ். இளைஞன் கைது-

arrestஇந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் 34 வயதுடையவர் எனவும் யாழ். சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர், கடந்த 18ம் திகதி, போலி கடவுச்சீட்டை வைத்து சவூதி அரேபியாவுக்குச் சென்று வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினை எடுத்து அவருடைய புகைப்படத்தை ஒட்டி பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பிரதமருக்கு எதிராக 60 எம்.பி.க்கள் கையொப்பம்-

dalasபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 60பேர் கைச்சாத்திட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இதுவரை 60 எம்.பி.க்கள் கைச்சாத்திட்டுள்ளனர் என்று டலஸ் எம்.பி மேலம் குறிப்பிட்டுள்ளனர்.

ரவிராஜ் கொலை வழக்கு – விளக்கமறியல் நீடிப்பு-

ravirajதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டும் துப்பாக்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், டீ.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதன்படி குறித்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர்கள் ஐவரும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரத லக்ஷ்மன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு-

courtsபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு, பிரதிவாதி ஒருவர் இல்லாமையால் அடுத்த மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 28ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை, அடுத்தகட்ட விசாரணைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபரில் கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் கொலையைக் கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்-

malaiyakaththilபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஹற்றன் சாமிமலை ஸ்டொக்கம் பாடசாலை மாணவர்களும், பிரதேச மக்களும் இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலையிலிருந்து ஓல்டன் சாமிமலை பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுபட்டனர். புங்குடுதீவில் நடந்தது சரியா?, காமுகர்களுக்கு தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும், இனியும் வேண்டாம் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்யாவின் கொலையைக் கண்டித்து கிழக்கில் ஹர்த்தால்-

hartalமட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுவரும் ஹர்த்தால் காரணமாக அந்தப் பகுதியின் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் காமவெறியர்கட்கு அதி உச்ச தண்டனை வழங்கக் கோரியும், குற்றவாளிகள் சார்பில் யாரும் வாதாடக்கூடாது எனவும் கோரியே இந்த ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த ஹர்தால் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வியாபார ஸ்த்தாபனங்கள், பாடசாலைகள் அரச தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள், பொதுச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் பதாதைகளும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.