வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்) அவர்களின் கன்னியுரை-
வடமாகாண சபையின் 28ஆவது அமர்வு நேற்றுவியாழக்கிழமை பகல் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக புதிதாக பதவியேற்றுள்ள புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. கந்தையா சிவனேசன்(பவன்) அவர்கள் தனது கன்னியுரையினை ஆற்றினார்.
அவர் தனதுரையில்,
மதிப்பிற்குரிய தவிசாளருக்கும், முதலமைச்சருக்கும் சக மாகாணசபை உறுப்பினர்களுக்கும் எனது முதற்கண் வணக்கங்கள்!.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் அங்கத்துவக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பிலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களால் தமது பிரதிநிதியாக இச்சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள நான் இச்சபையின் ஒற்றுமையானதும் நியாயமானதுமான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன் என்பதனை முதலில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
வட மாகாணசபை உறுப்பினராகவிருந்த அமரர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்கள் ஒரு சமூக சேவையாளர் அவரது இழப்பானது இந்த சபைக்கு ஒரு பேரிழப்பாகும். அவருக்கு அடுத்தபடியாக இருந்த நான் இந்த சபையிலே பதவி ஏற்றிருக்கின்றேன். எனவே நான் அவருடைய சேவைகளையும் தொடர்ந்து செய்வதற்கு என்னால் இயன்றளவு முயற்சியெடுப்பேன்.
மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்திருப்பது மிகவும் மிலேச்சத்தனமானதொரு செயலாகும். யுத்த காலங்களிலே நடந்த நிகழ்வுகளுக்காக நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா சபையிலும் நியாயம் கேட்டு நிற்கின்றோம். ஆனால் அதைப் போன்றதொரு சம்பவம் இப்போது எங்களுடைய சமூகத்திலேயே நிகழ்ந்திருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையளிக்கின்ற விடயம் என்பதுடன் மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும்.
அங்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு மாத்திரமல்ல வன்னியிலே இருக்கின்ற தொண்ணூறு வீதமான பிரதேசங்கள் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றன. மல்லாவி புத்துவெட்டுவான் பாதையிலே பிள்ளைகள் பல மைல் தூரங்கள் யானைக் காடுகளினூடாக சென்றுதான் கல்விகற்று வருகின்றனர். அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பீதியடைந்தநிலையில் இருக்கின்றார்கள். எனவே ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய பிரச்சினைகளையும் இந்த சபை தீர்க்க வேண்டும்.
மற்றும், முல்லைத்தீவு மாவட்டம் வடக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இது அனைவரும் ஏற்றுக்கொண்டதும் தரவுகளின் அடிப்படையிலானதுமான உண்மையாகும்.
கல்வி, சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், போக்குவரத்து வசதிகள், மீன்பிடித்துறை, விவசாயம், வீடமைப்புத் திட்டங்கள், வனப் பாதுகாப்பு, கால்நடை விருத்தி, வாழ்வாதாரத் திட்டங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் கடந்த காலங்களில் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய அபிவிருத்திப் பணிகள் போதுமானளவு விரைவாகவோ பூரணமாகவோ மேற்கொள்ளப்படவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதும் ஒரு இனத்தின் அடிப்படையையே இல்லாதொழிக்கும் வகையிலானதுமான கொடூரமான யுத்த நடவடிக்கைகளால் மிக மோசமான அழிவுகளை தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் சந்தித்த வரலாறு முழு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்பு அந்தக் கையறு நிலையிலிருந்தும் வலிகளிலிருந்தும் மீண்டு எழுவதற்கு ஒவ்வொரு பொதுமகனும் இன்றுவரை போராடிக் கொண்டேயிருக்கிறான்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமை, மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூரணமாக செய்து கொடுக்கப்படாமை, கல்வி, சுகாதாரம், நீர் விநியோகம் போன்ற பிரிவுகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதியளவு இல்லாமை, வெளியாரின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற தொல்லைகளும் இழப்புக்களும் தொடர்ந்து கொண்டிருப்பது, அத்துமீறிய காடழிப்புக்களால் குடிப்பரம்பல்களில் ஏற்படுத்தப்படுகின்ற தாக்கங்கள் என பல திசைகளிலும் குறைபாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்குடன் இச்சபையால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னின்று உழைப்பதற்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தயாராக உள்ளதனை மீண்டும் ஒருமுறை இச்சபை முன்னால் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இடம்பெயர்ந்து வருபவர்களை குடியேற்றுவதிலும், அவர்களுக்குரிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொள்வதிலும் உள்ள நடைமுறை சார்ந்த நெருக்குவாரங்களை அறியாதவனல்ல நான். 1977ற்குப் பின்பு வன்செயல்கள் காரணமாக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களை காந்தீயம் அமைப்பினூடாக வாழ்வளித்த அனுபவங்கள் எமது அமைப்பிற்கு நிறையவே உண்டு. காந்தீயம் தடை செய்யப்பட்ட பின்பு கூட சாத்தியமான சகல வழிகளிலும் எமது பணிகளை நாம் தொடரவே செய்தோம். பாராளுமன்றம், உள்ளுராட்சி சபை, மாகாண சபை, என்பனவற்றை எமது அரசியல் பயணத்தில் நாம் பயன்படுத்திக் கொண்ட, பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற வாகனங்களாகவே கருதுகிறோம்.
அரசியலமைப்பின் 13வது திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைகள் சட்டமூலம், அதிகாரங்களின் பகிர்வை வேண்டிநின்ற எமது மக்களின் கோரிக்கைகளுக்கு குறைந்தபட்சமான தீர்வைக் கூட வழங்கியிருக்கவில்லை என்பதனை திட்டவட்டமாக தெரிவித்து அதனை எதிர்த்த அமைப்புக்களில் புளொட் அமைப்பும் ஒன்றாகும்.
ஆனால் இன்று மிச்சசொச்சமாக இருந்த அற்பத்தனமான அதிகாரங்களைக்கூட இழந்து நிற்கின்ற மாகாண சபையை பூரணமாக பயன்படுத்துவதற்கும், அதற்கு வழங்கப்பட்டிருந்த பலவீனமான அதிகாரங்களையாவது முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்கின்ற கடைமட்ட கோரிக்கைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாம் அனைவரும் நிற்கின்றோம்.
தற்போதுள்ள வடக்கு மாகாணசபை, அளவுக்கதிகமான பிரேரணைகளை முன்மொழிகின்ற சபையாக மட்டும் உள்ளது என்கின்ற விமர்சனங்கள் பலவற்றை நாம் சந்தித்துள்ளோம். மாகாணசபை என்பது அடிப்படையில் ஒரு நிர்வாக அலகு என்பதற்கும் அப்பால் எமது அரசியல் அபிலாசைகளை சட்டரீதியான அமைப்பின் உதவியுடன் நீதிக்குட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்த கிடைத்துள்ள வாய்ப்பு என்பதன் அடிப்படையில் அப்பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையே. ஆனாலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் கொண்டுவரப்படும் பிரேரணைகளில் காட்டப்படும் அக்கறையினை விட அதிகளவான அக்கறையை பயனுள்ள நிலையியல் சட்டங்களை உருவாக்குவதில் செலுத்த வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ஏதுவாக ஒரு அடியையேனும் முன்னோக்கி எடுத்து வைக்க முடியும்.
உயர்வான பண்பாட்டையும் சிறந்த வாழ்க்கை முறைகளையும் ஆரோக்கியமான அந்தச் சூழலையும் உறுதியான வாழ்வாதாரங்களையும் அதிகளவாக கல்வி அறிவையும் கொண்டிருந்த வட மாகாணம் கடந்தகால யுத்த நடவடிக்கைகளால் இவை எல்லாவற்றையும் இழந்து நிற்பதோடு தன்னை மீள உருவமைத்துக் கொள்வதற்காக வெளியாரிடமும், சர்வதேச நிறுவனங்களிடமும், அயல் தேசங்களிலும், அரச நிறுவனங்களிடமும் இன்று கையேந்தி நிற்கின்றது.
எமது நாட்டின் அதிகாரப்பரவலாக்கல் முறையில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டுமாயின் அது மத்தியில் அமைந்துள்ள அரசாங்கத்தின் தயவில் பெருமளவுக்கு தங்கியிருக்கின்றது என்பது நடைமுறையில் உள்ள அம்சமாகும்.
கொழும்பில் வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி மாற்றம் எம்மை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், புதிய வாய்ப்புக்களை நோக்கி அணுகிச் செல்லவும் கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மாகாணத்தின் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
தென்னிலங்கையில் உள்ள மாகாணசபைகள் போலன்றி நாம் இரு முனைகளில் போராட வேண்டியவர்களாக உள்ளோம். எமது மண்ணையும், மக்களையும், வளங்களையும் காப்பாற்றிக் கொண்டு அதனை வளப்படுத்தி விருத்தி செய்ய வேண்டும் என்பதற்கானது ஒரு முனைப்போராட்டம்.
எமது மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவற்றை நிரந்தரமாக தக்க வைப்பதற்குமான அரசியல் தீர்வினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பெற்றுவிட வேண்டும் என்பதற்கானது மறுமுனைப் போராட்டம்.
இவ்விரு போராட்டங்களும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றில்; சமரசத்திற்கு இடமிருக்க முடியாது. அபிவிருத்திக்காக உரிமைகளையோ, உரிமைகளுக்காக அபிவிருத்தியினையோ நாம் இழக்க முடியாது. இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே எமது அமைப்பு இந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தி வருகிறது.
1994இல் யுத்த சூழ்நிலையை பயன்படுத்தி சனநாயக ரீதியில் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உள்ளுராட்சிக் கட்டமைப்புக்களை கைப்பற்றி தனது அரசியல் ரீதியான நிலையை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை அரசு முயன்ற வேளையில் அதனை சிதறடிக்கும் நோக்கில் பலதரப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்பட்டு எமது மக்களின் அரசியல் தலைமைத்துவம் பேரினவாதிகளிடம் செல்லாது தடுத்தோம். அன்றிலிருந்து இன்றுவரை உரிமைகள் தொடர்பாகவும், அபிவிருத்தி தொடர்பாகவும் சமரசத்திற்கோ, சலுகைகளுக்கோ உட்படாத வகையிலே செயற்பட்டு வருகிறோம் என்பதனையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இறுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமையக்கூடிய நான்கு விடயங்களை வலியுறுத்தி எனது உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன்.
முதலாவது, வடக்கு மாகாணத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை விசேட தேவையுடைய மாவட்டமாக பிரகடனப்படுத்தி அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் விரைவாக முழுமையாக செயற்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
இரண்டாவது, மாகாணசபைக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் காணப்படும் வெற்றிடங்களை மாவட்டத்தின் தகுதி வாய்ந்த இளைஞர் யுவதிகளை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, 1983 கலவரங்களின் போதும் அதன் பின்பும் எமது கையை விட்டுப்போன மற்றும் பேரினவாதிகளால் களவாடப்பட்ட எமது எல்லைக் கிராமங்களை மீண்டும் அந்த கிராமங்களுக்குரிய மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வழிசெய்ய வேண்டும்.
நான்காவது கோரிக்கையானது, இச்சபையில் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்தாலும் அதன் விசேட தேவை கருதி மீண்டும் ஒருமுறை அதனை வலியுறுத்த விரும்புகிறேன். வடக்கு மாகாண சபையின் தலைமைப் பணிமனையும் அதன் உப பிரிவுகளும் ஓரிடத்தில் அதாவது மாகாணத்தின் மையமாகவும் முல்லைத்தீவு பெருநிலப்பரப்பின் மையமாகவுள்ள மாங்குளம் பகுதிக்கு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி எனது உரையை முடிக்கிறேன்.
நன்றி,
க.சிவநேசன்,
மாகாண சபை உறுப்பினர்
வடக்கு மாகாண சபை.
21.05.2015.