தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் பதவியேற்பு-
தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா 5ஆவது முறையாக இன்று மீண்டும் பதவியேற்றுள்ளார். ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்றுகாலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, 28 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இத் தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர் மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தார் இத்தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின. இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா நேற்றையதினம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து.
இலங்கை – ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஃப்ரேங் வால்டர் ஸ்ரெயின்மெரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் பேசப்பட்டுள்ளது. இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்துதல், மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச சமுகம் மற்றும் அமைப்புகளுடன் சுமூக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் முயற்சி குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீரவினால் விளக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக துறை சார்ந்தவைகள் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை, அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பல நீக்கப்பட்டுள்ளமை, மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் பற்றியும், வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் மீளழைக்கப்பட்டுள்ளமை பற்றியும் அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடை-
யாழ் மாவட்டத்துக்குள் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அல்லது பேரணிகள் செல்லவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தை அடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. இவ்வார்ப்பாட்டங்கள் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்தின் சில பிரதேசங்களுக்கும் கூட வியாபித்திருந்தன. இதனால், யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை கடந்த சில தினங்களாக பெருமளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியது என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸி. அகதிகள் வேறு முகாமிற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு-
அவுஸ்திரேலியாவினால் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலர், அங்குள்ள கிழக்கு லோரென்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர். எனினும் இதற்கு அகதிகள் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 506 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 289 அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகதி அந்தஸ்த்து கிடைக்கும் வாய்ப்புள்ள 289 பேரே குறித்த முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களில் 20 பேரை தவிர ஏனையோர் அந்த முகாமிற்கு செல்ல மறுத்துள்ளனர். இந்த நிலையில் முகாமிற்கு செல்ல மறுக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பப்புவா நியு கினி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அகதிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், முகாம்களுக்கு மாற ஒத்துழைக்காதவர்களுக்கான மருத்து, தொலைபேசி மற்றும் இணையம் உள்ளிட்ட வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்-
புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வு படுகொலையைக் கண்டித்து திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் காலை 8.30 அளவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தனர். இதேவேளை, முற்றவெளி மைதானத்திலிருந்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டக்கார்கள் செல்வதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர். மைதானத்திற்குள் மாத்திரம் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.
அரசியலமைப்பு சபையை உருவாக்கவும்-பெப்ரல்-
பொது தேர்தலுக்கு முன்னர் அரசியல் அமைப்பு சபை உருவாக்கப்பட வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள போதும், அதில் கூறப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபை இன்னும் உருவாக்கப்படவில்லை. இது அதிருப்தியளிப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் தேர்தல் சுயாதீன ஆணைக்குழு, காவற்துறை சுயாதீன ஆணைக்கழு மற்றும் அரச சேவைகள் சுயாதீன ஆணைக்குழு ஆகியவற்றையேனும் நியமிக்க பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பஸ் தீக்கிரையானது, பயணிகள் அதிஸ்டவசமாக தப்பினர்-
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. காலி சமுத்ரா மாவத்தை பிரதேசத்தில் இன்றையதினம் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பஸ் தீப்பற்றியபோது, அதனுள் 60 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பஸ்ஸின் பின் வாசலால் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த பஸ் தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. காலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வீட்டுத் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை-
இந்திய வீட்டுத்திட்டத்திற்காக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியில் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் ரூபாய் பயனாளிகளின் கணக்குகளில் இடப்படுகிறது. இதனைக் கொண்டு தங்களுக்கான வீட்டை அவர்கள் நிர்மானிக்க வேண்டும். எனினும் அதிகரித்துள்ள செலவுகளால் இந்த தொகை போதாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 ஆயிரம் வீடுகள் இன்னும் 7 மாதங்களில் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.