இனியொரு யுத்தம் ஏற்படாது-பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா-

sarath fonsekaஇந்நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீமகா போதியில் தான் பிரார்த்தித்துக் கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இப்புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன்மூலம் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட எவரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை அபிவிருத்திசெய்ய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மதங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க வேண்டும். சந்தேககங்களுக்கு இடமளிக்கக் கூடாது. விசேடமாக, இந்நாட்டில் இனி யுத்தமொன்று ஒருபோதும் இடம்பெறாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை என பொன்சேகா, இதன்போது மேலும் கூறியுள்ளார்.

சித்தண்கேணி இளைஞர் முன்னேற்றக் கழகத்திற்கு மின் விளக்குகள்-

ainkaranவலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் அழைப்பின் பெயரில் கடந்த 20.05.2015 அன்று வலி மேற்கு பிரதேசத்திற்கு வருகை தந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கள் சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேசத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பொருட்டு வீதி மின் விளக்குகளை அன்பளிப்பாக வழங்கினார். இவ் நிகழ்வு கழகத்தின் தலைவர் செல்வன் ப.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதய உறுப்பினருமான ஜெபநேசன் மற்றும் கழக உறுப்பினர்கள் கிராமத்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் சந்திப்பு-

tna (4)தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது புங்குடுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தை அடுத்து இடம்பெற்று ஆர்ப்பாட்டங்களால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாகவும் இதன்போது பேசப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால-

maiththiriஇலங்கை இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இன்று குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு சம்பவம், விசாரணைக்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்-

policeபாடசாலை மாணவி வித்தியாவில் படுகொலை சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த மாணவின் படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறையும் பிரதேசத்தின் பதற்றநிலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் ஒட்டுமொத்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. யாழ்ப்பாணம் இப்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, நேற்றும் இன்றும், எந்த ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

தேசியக் கொடி குறித்த புதிய சட்டத்திற்கு அங்கீகாரம்-

national flagதேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய இதுவரை காலமும் தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் சட்டமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கள் பெரேரா தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதனை மீறினால் அனுபவிக்க நேரிடும் தண்டனைகள் தொடர்பான யோசனைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் ஆலோசனைகளும் பெறப்படவுள்ளன. புதிய சட்ட நடைமுறையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின் தேசியக் கொடியின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதனை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக கோலித குணதிலக்க-

golithaபாதுகாப்பு படைகளின் பிரதானியாக விமானப்படையின் தற்போதைய தளபதி ஏயார் மார்ஷல கோலித குணதிலக பதவியேற்கவுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாக தற்போது பதவிவகிக்கும் முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய அடுத்த வாரத்தில் ஓய்வுபெறவுள்ளார். அவரது பதவிவெற்றிடத்திற்கே கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஏயார் மார்ஷலாக உள்ள கோலித குணதிலக்க ஏயார் ஷீப் மார்ஷலாக பதவியுயர்த்தப்படவுள்ளார். ஜகத் ஜயசூரிய பிரேஸிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்-

shotயாழ். வடமராட்சி கிழக்கில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுத்துறைப் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுத்துறை, 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மந்திகைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணிக்கற்கலை கடத்தியவர் கைது-

stone97 லட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்க கற்களை கடத்த முயற்ட்ட இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணிக்க கற்களை அவர் டுபாயிற்கு கடத்த முற்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 200 கரட் நிறைகொண்ட இவை, சிகரட் பொதிகளில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டுள்ளார். அவர் தற்போது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு கொடூர செயல் வரலாற்றுத் துயரமே-கலாநிதி குமரகுருபரன்-

kumaraguruparanவித்யாவின் கொடூரமான கொலை பெரும் துயரமிக்கது, மிருகத்தனமானது. கிருஷாந்தி, இடா கமலிற்றா, சாரதாம்பாள் போல இன்னும் பலர் அரசபடைகளின் கையில் மரணித்தபோது ஆத்திரமடைந்தோம், வெகிண்டு எழுந்தோம். ஆனால் இன்றோ நம் தமிழர் நடாத்தியிருக்கும் இந்த நாயினும் கேடாம் நிலைகண்டு அதிர்ச்சியடைந்தேன். ஓர் தமிழனாக வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. தமிழனே இப்படியொரு கேடுகெட்ட செயலை செய்திருப்பது தான் வரலாற்றுத் துயரம். என ஜனநாயக தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்குரிய தண்டனையை நீதிமன்று வழங்காமல் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அந்த எண்ணத்தை அமைதியான முறையில் பொலிசார் நியாயமாக நடக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி . ஆர்ப்பரித்திருப்பது நியாயம். அதை விடுத்து எதோ பொலிசாரும் நீதி மன்றும் தீங்கிழைத்தது போல தமிழர்களாகிய நாங்கள் கல்வீசி நீதிமன்று எனும் எமது சொத்தையே தாக்குவது எந்தவகையில் நியாயமாகும் பண்பாகும். எம்மை திட்டமிட்டு பயங்கரவாதிகளாக சித்தரிக்கவென ஒரு கூட்டம் காத்திருக்கின்றது.

Read more