மரண தண்டனையை அமுல்செய்ய நடவடிக்கை-
நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் பாரியளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.
மருதானை தீவிபத்தில் ஐவர் உயிரிழப்பு-
மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்குக்கு அருகில் உள்ள வெதுப்பக மொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வாகனங்கள் ஆறு பயன்படுத்தப்பட்டன. சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பயன்படுத்தும் அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயையடுத்து கிளம்பிய புகையை உள்ளிழுக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்த வெதுப்பகம் 5 மாடிகளை கொண்டது என்றும் ஐந்து மாடிகளுக்கும் தீ பரவியிருந்தது. இந்த வெதுப்பகத்துக்கு முன்பாக இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
வலி மேற்கு முன்பள்ளிகளுக்கு வேள்ட் விசன் நிறுவனம் உதவி-
யாழ். வலி மேற்கு பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் வேள்ட் விசன் நிறுவன அபிவிருத்தி வளவாளர் வி.வெஞ்சஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 22.05.2015 அன்று வலிகாமம் வலயக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக சங்கானைக் கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகட்கு சிறுவர் நூல்கள் உள்ளக விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை உதவிப் பிரதேசசெயலர் திருமதி. அ.செந்தூரன், சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஏ.எஸ்.மரியாம்பிள்ளை, வலி மேற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி. சாரதா. உருத்திரசாம்பவன், வேள்விசன் முகாமையாளர் திரு.ஐ.மைக்கல், சங்கானை பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிபபாளர் வீ.சிவகுமார், வலிகாமம் வலய ஆரம்ப முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ரூபா உதயரட்ணம், சங்கானை பிரதேச செயலக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி. சி.ஜெயதுர்க்கா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.