இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவின் மூன்றாம்நாள் விழா-

25.05.2015 (4)யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25.05.2015) திங்கட்கிழமை மாலை 3மணியளவில் இணுவில் இந்துக்கல்லூரி முன்றல். அமரர் சுந்தரலிங்கம் அரங்கில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் செல்வத்தான் அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. சு.சண்முககுலகுமாரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், உடுவில்), திரு. சு.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வில் வரவேற்புரையினை பிரதி அதிபர் திருமதி த.தேவகரன் அவர்களும், வாழ்த்துரையினை திரு. குபேரநாதன் அவர்களும் ஆற்றினார்கள். தொடர்ந்து இணுவில் இந்துக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி, ராமநாதன் கல்லூரி மற்றும் இணுவில் இந்து இளைஞர் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாணவ மாணவிகளது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர் சசிதரன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தார்.

இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

மிக அற்புதமான நிகழ்ச்சிகளை இந்த மாணவிகள் நடத்தியிருக்கின்றார்கள். இன்று எனது பேச்சினை நிறைவு செய்துகொண்டு நான் எழுந்து சென்றிருந்தால் இந்த அருமையான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பினைத் தவறவிட்டிருப்பேன். என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு சங்கீதமோ நடனமோ என இந்தக் கலைகள் எதுவும் தெரியாது. அதிலே நான் ஒரு பாமரன். ஆனால் எந்தக் கலையாக இருந்தாலும் பாமரனைச் சென்றடைந்தால்தான் அந்தக் கலைஞனின் வெற்றி உறுதியாகிறது. அதுபோல் இந்த மாணவிகள் இன்று அந்த வெற்றியை அடைந்திருக்கின்றார்கள். அத்துடன் இணுவில் கிராமம் என்பது கல்வியிலே மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு கிராமம் என்பதுடன் கல்வியிலும் கலைகளிலும் வளர்ந்த ஒரு கிராமமுமாகும். கடந்த காலங்களிலே இங்கு கல்வி கற்ற விரிவுரையாளர் தேவராஜா மற்றும் கலையிலே வீரமணி ஐயர், காலஞ்சென்ற தவில் சின்னராஜா, காலஞ்சென்ற நாதஸ்வரம் கோவிந்தசாமி உள்ளிட்ட பல பேர்களைக் கொண்ட ஒரு மிகச் சிறந்த கிராமம் இது. யுத்தத்திற்குப் பின்பு இப்போது இக்கிராமம் பின்தங்கி இருந்தாலும், இந்த மாணவர்களின் கல்விப் பெறுபேறுகளை அறிகின்றபோதும், இம் மாணவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றபோதும் நிச்சயமாக இந்தக் கிராமம் யாழ். நகரிலே மீண்டும் தலைநிமிர்ந்து நின்று எங்கள் சமூகத்தை வளர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று தெரிவித்தார். 

இந்த விழாவின்போது முன்னைநாள் ஆசிரியை திருமதி ஆறுமுகம் (திருமுருகனின் தாயார்) அவர்கள் உள்;ளிட்ட அறிஞர்கள், கலைஞர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டார்கள். நன்றியுரையினை ஆசிரியர் ச.முகுந்தன் அவர்கள் ஆற்றினார். இந்த விழாவினை அதிபர், ஆசிரியர்கள், இந்துக் கல்லூ}ரி கல்விச் சமூகம் மாணவர்கள் என அனைவரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

25.05.2015 (8) 25.05.2015 (9) 25.05.2015 (10) 25.05.2015 (1) 25.05.2015 (2) 25.05.2015 (3) 25.05.2015 (5) 25.05.2015 (6) 25.05.2015 (7)