ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் அரசாங்க உயரதிகாரிகள் சிலரும் அங்கு சென்றுள்ளனர். யாழ். மாநகரசபை மைதானத்திற்கு வந்திறங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றார். மேலும், யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகள் மற்றும் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் நேரடியாக ஆராயும் பொருட்டு ஜனாதிபதி தலைமையிலான சந்திப்பொன்றும் யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் வட மாகாண ஆளுனர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்துள்ளனர். இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். இன்று யாழ். வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை-
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் பேச்சாளர் காரியாலயாலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவில் மாணவியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இதற்கமைய பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெயரிடப்பட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள்-
அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதன்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவகவும் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். மேலும் அரசியல் சாராத மூவரும் இக் குழுவில் அடங்குகின்றனர். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இந்த சபையின் அதிகாரபூர்வ உறுப்புரிமையை பெற்றவர்களாவர். அரசியலமைப்புச் சபையில் 10 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.
ஞானசார தேரர் பிணையில் விடுதலை-
ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், நேற்று நாடு திரும்பியிருந்த நிலையில் இன்றுகாலை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அத்தே ஞானசார தேரரை, 5,000 ரூபாய் காசு பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், பிணையில் விடுவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் கலந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தமை தொடர்பில் அவர் இன்று கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதவான் ஞானசாரதேரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்-
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதே சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் வழி நடத்தலில் தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்கின்ற செயல் திட்டத்தின்கீழ் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்களில் ஒன்றாக ஜேர்மனிய புலம்பெயர் உறவான திரு. செல்வதுரை. ஜெகநாதன் மற்றும் ஆறுமுகம் இராஜரட்ணம் ஆகியோரின் உதவித்திட்டத்தின் ஊடாக உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் வாழுகின்ற பெண்ணைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு வீட்டின் சில பகுதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாட்டினை வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு புனரமைப்பின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சமூகசேவை உத்தியோகஸ்தர் பலி-
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் மண்டூரில் இன்றுகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகஸ்தர் ஒருவர் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூரிலுள்ள தனது வீட்டில் இருந்தபோது, சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற இந்த உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். உடனடியாகவே அவரை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது, அவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வலி மேற்கில் வித்தியாவுக்கு ஆதரவாக போராட்டங்கள்-
புங்குடுதீவில் இடம்பெற்ற கூட்டு வன்கொடுரத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்துள்ளது. மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை மாணவர்கள் விததியாவுக்கு இதய அஞ்லியினை செலுத்தியதோடு நீதி வேண்டியும் மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பு வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் நிகழ்வின்போது வலமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்துகொண்டு வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேசிய நிறைவேற்று சபையில் ஜே.வி.பி பங்கேற்காது-அனுரகுமார-
இனிவரும் காலத்தில் தேசிய நிறைவேற்று சபையில் தமது கட்சி பங்குபற்றாது என ஜே வி பி தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் திகதிக்கு பின்னர் தேசிய நிறைவேற்றுச் சபை கூடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.