Posted by plotenewseditor on 27 May 2015
Posted in செய்திகள்
பார்வையற்றோர்க்கான விசேட நூலகம் திறந்து வைப்பு-
யாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அனுசரணையில் யாழ். பொது நூலகத்தில் பார்வையற்றவர்களுக்கான விசேட நூலக அலகு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக பார்வையற்றவர்களுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தனர். யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் அற்புதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வித்யாவிற்காக தொடரும் போராட்டங்கள்-
யாழ் புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினமும் சில பகுதிகளில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மாணவியை நினைவுகூறும் வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, மூதூர் பாரதிபுரம் பெண்கள் அமைப்பினரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து வித்தியாவுக்காக இன்று பேரணியில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் இன்றுகாலை அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதேவேளை, மாணவியின் கொலையை கண்டித்து தோப்பூர் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சச்சிதானந்தம் கொல்லப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்-
சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புப் தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆயுதகலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டுபிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நீதியினை நிலைநாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்; கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் நியமனம்-
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். யூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலைவழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இளஞ்செழியன் கடமையாற்றினார். அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். Read more