இந்தியாவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

ereஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயில் மற்றும் வெப்ப காற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 852 பேரும், தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகி உள்ளனர். 

மார்ச் மாதம் துவங்கி மே 2வது வாரம் வரை பருவம் தவறி மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், கோடை வெயிலில் இருந்து தப்பித்தோம் என நாடு முழுவதிலும் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். மழை ஓய்ந்ததும் கடுமையான வெயில் தாக்க துவங்கியது. இந்த மாறுபட்ட தட்டவெப்ப நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். 

வெயிலுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பல பகுதிகளில் அரசு சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் எளிமையான ஆடைகளையே உடுத்த வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தூய்மையான குடிநீரை அதிகளவில் உட்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.  

அதிக பட்சமாக ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மரிலங்களில் வெயிலின் தீவிரம் அதிகமாக காணப்படுவதுடன், அனல்காற்றும் வீசி வருகிறது. இதனால் அடுத்த வரும் நாட்களில் வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.