அமைச்சரவைக்கு ஐவர் நியமனம்-

news ministersஅமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் என ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.

நோர்வே உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

norwayஇலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறேட் லோசன் இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையங்கள் குறித்து அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியதுடன், வலி. வடக்கு வரை படத்தினையும் பார்வையிட்டுள்ளார். பின்னர் மாலை 03.00 மணிக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

வடமாகாணத்தில் பொலிஸ{க்கு ஆட்சேர்ப்பு-

police ...வட மாகாணத்தில் நிலவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக பொலிஸ் உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் கான்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்களை பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வட மாகாணத்தில் தற்போது சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாமல் உள்ளது.

இதனால் பொலிஸ் செயற்பாட்டை சீராக மேற்கொள்ள முடியவில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, தமிழ் தரப்பினருடைய விண்ணப்பங்கள் குறைவாக இருந்தது. வடமாகாணத்திலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைவதால் பொலிஸில் உள்ள மொழிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடந்த ஆட்சேர்ப்பின் போது, 1000 விண்ணப்பங்கள் தமிழ் பிரதேசங்களில் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 825க்கும் மேலான விண்ணப்பதாரிகள் தகைமை பெற்றிருந்தனர். குறிப்பாக வட மாகாணத்தில் தமிழ் பெண் கான்ஸ்டபிள்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். தற்போதுள்ள சிங்கள மொழி சார்ந்த பொலிஸார், தமிழ் பிரதேசங்களில் தமிழ் கதைத்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், தமிழை எழுத வாசிப்பதற்கு பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸார் போதுமானதாக இல்லை. நீதிமன்ற செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வதற்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆர்வமாகவுள்ளவர்கள் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தெரிவு செய்யப்படுபவர்கள் வடமாகாணத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.