சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்-

maithripala3சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித பிரணாந்து, எஸ்.அனில் சில்வா, மனோஹார டி சில்வா, பேராசிரியர் ஹர்ஷ கபில்ராஜ், இக்ரம் மொஹமட், சஞ்ஜீவ பிரனீத் ஜெயராஜ் ஆகியோரும் சட்டத்தரணிகளான பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்க, தாரணி எஸ்.விஜேதிலக, பேராசிரியர் காமிலா குணரத்ன, எம்.சுவாமிநாதன், என்.செல்வக்குமார், நவீன் சரத்மாரப்பன, திசாத் விஜேகுணவர்த்தன, ஜீ.ஜீ.அருள்பிரகாசம் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை 2015ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்-

cpaமறுசீரமைப்பு மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு பொறிமுறை ஆரம்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவை எவ்வாறு செயற்படவுள்ளன, அதன் கால எல்லை மற்றும் உள்ளடக்கப்படவுள்ள பிரதேசம் போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவ்வாறான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை-

newsகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டார். அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கிய அணிகளை, ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததுடன், ஆட்சிக்கு வந்த பின்னரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அந்த அணிகள் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஷ்பிரயோகம்-

radhakrushnanகடந்த 14 நாட்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் சில சம்பவங்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய கடந்த இரு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் அமைச்சர் ஜெனீவாவிற்கு விஜயம்-

dfddஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச தொழில் சம்மேளனத்தில் பங்கேற்கும் நோக்கில் இன்றுமாலை தொழில் அமைச்சர் நாவின்ன ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கையின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளங்கள் குறித்து அமைச்சர் விசேட உரையாற்ற உள்ளார். சர்வதேச தொழில் சம்மேளனத்தில் சுமார் 185 நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நாரந்தனையில் இளைஞன் மீது வாள்வெட்டு-

knifeயாழ். நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன்மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.