கிளிநொச்சி மாணவியை காணவில்லையென முறைப்பாடு-

vidhushaகிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்-

policeசேவையின் தேவை கருதி உடன் அமுலாகும் வகையில் நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் புள்ளிவிபர பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாளிகாவத்தைக்கு மாற்றப்பட்டுள்ளார். பதுரளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹபராதுவைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேநேரம் பொலிஸ் புள்ளிவிபரபிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த கே.பி.விஜேமான்ன வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன் பகமுன பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முல்லியாவெலி பொலிஸ் நிலையத்துக்கும் பொலனறுவை காவற்துறை பிரிவின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக இருந்த என்.ஏ.குணவர்ன பகமுன பொலிஸ் நிலையத்தின் தற்காலிக பொறுப்பதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமது காணிகளுக்குள் மக்கள் செல்வதற்கு தடை-

muthurதிருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் மக்கள் உள்நுழைவதற்கு பொலிஸார், நேற்று தடை விதித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி பொலிஸார் உள்நுழைவுத் தடை உத்தரவை அறிவித்தததையடுத்து, அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்த காணிகளின் உரிமையாளர்களும் உள்ளுர் மக்களும் தற்போது வெளியேறியுள்ளதாக தெரியவருகின்றது இதன் காரணமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதற்கோ வெளியார் நுழைவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. காணிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் கூடாரங்களும் மக்களால் அகற்றப்பட்டுள்ளன. நேற்றுமுதல் இடம்பெயர்ந்த மக்கள் அந்த பகுதிக்குள் செல்வதில்லை. 9 வருடங்களின் பின்னர், தமது பூர்வீக காணிகளில் விரைவான மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்திருந்த சம்பூர் பிரதேச மக்கள் கடந்த ஒருவார காலமாக காடுகள் அடர்ந்து போய்க் கிடக்கும் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

4ஆயிரத்து 200அகதிகள் ஒரேநாளில் மீட்பு-

refugeesமத்தியதரை கடல் பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படும் 4,200 சட்டவிரோத குடியேறிகளை காப்பாற்றும் முயற்சியில், இத்தாலிய கரையோர காவல்படையினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்படையினர் கடலில் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 17 சடலங்களை கண்டுள்ளனர். சடலங்களுடன் இருந்த 300க்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் கடல் பயணத்திற்கு ஏற்றதல்லாத வசதியற்ற சிறிய படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பது குறித்து கடற்படையின் பேச்சாளர் தகவல்களை வெளியிடவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்பிரல் 12ஆம் திகதி முதல் மே மாதம் 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் 3,791 சட்டவிரோத குடியேறிகளை இத்தாலிய கரையோர காவல்துறையினர் மீட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987-

smokigஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.