Header image alt text

சுதுமலை நாமகள் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

DSC_5835யாழ். சுதுமலை நாமகள் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா சுதுமலை வடக்கு தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. திரு. ஜே.பாலேந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. பேரின்பநாயகம் (ஸ்தாபகத் தலைவர், நாமகள் பாலர் பாடசாலை) திரு. தனபால (கிராம சேவையாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பாலர் பாடசாலைச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் முன்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நாட்டிவைத்தார்.

இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

Read more

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கவில்லை-

maithriமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி நிறைவுக்கு வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் தற்போது வேட்புமனு வழங்க நேர்முகப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுமந்திர கட்சி கூட்டணியில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட மாட்டார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிபெற்றால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கு அமைய பிரதமர் தெரிவு செய்யப்படுவார். முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அல்லது அறிவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சித் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கவே வெளியேறினேன்-மைத்திரி-

maithriநவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்யமுடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறியுள்ளார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொண்டதாகவும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 100 நாட்களில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாணவர் அணி இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் தலதா அதுகோரவின் பிரதான ஆதரவாளர் கொலை-

talathaவெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் பிரதான ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்வம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, தேல, ஹெரகல்லேவத்த எனுமிடத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான துஷார தேவாலேகம என்பவரே கொல்லப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் நுறியுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது தேர்தல் கொலை இதுவாகும் என கபே கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படமாட்டாது-

mahindaபொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்தாதிருக்க தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் நிலையில், பொதுத் தேர்தல் இடம்பெற உள்ளமையே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். வாக்களிக்கும் மத்திய நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்துவதால், வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்த முடியாது. அதனை ஒழுங்குபடுத்துவதற்கு அதிககாலம் எடுப்பதே அதற்கான காரணம். சாதாரணமாக வாக்களிப்பு மத்திய நிலையமாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க குறைந்தது 5நாட்களேனும் செல்லும். இது பரீட்சை நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கண்டி, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதில் இந்த சிக்கல் அதிகளவில் தாக்கம் செலுத்தும். எவ்வாறாயினும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ள நிலையில் மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.

நான்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பதவிநீக்கம்-

jailமட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் நான்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை தப்பியோடிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்கள் நான்குபேரும் பதவிநீக்கம் செய்யப்பட்டதுடன் இச்சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி பொலன்னறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை கர்மாந்தபுர பகுதி என்றும் கேகாலை பன்னல்தெனிய டோலம்பிட்டிய என்றும் இருவேறு முகவரிகளைக் கொண்ட விதானலாகே டொம் ஒஸின் (வயது 35) என்கிற சிறைக்கைதி கடந்த 2007 டிசம்பர் மாதத்திலிருந்து தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இக்கைதி தப்பிச்சென்றுள்ள சம்பவத்திற்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க இவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

உடுவில் மல்லுவம் அண்ணா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழா-2015

anna sanasamooka nilaiyam mallvam (2)யாழ். உடுவில் மல்லுவம் அண்ணா சனசமூக நிலையமும், கோண்டாவில் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து நடாத்திய அண்ணா முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா 2015 நேற்று முன்தினம் (27.06.2015) சனசமூக நிலையத்; தலைவர் திரு. த.தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ச.தேவகரன், பனை, தென்னைவள அபிவிருத்தக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Read more

சுவிஸின் சூரிச் Unter Affoltern மண்டபத்தில் 26ஆவது வீரமக்கள் தினம்-

Untitled-1 (1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25,  Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்

மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

• அன்றையதினம் (05.07.2015) காலை 8.30க்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்றுகாலை 8.30க்கு நேரடியாகவே அங்கு வருகைதந்து தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம். அன்று பிற்பகல் 2.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

Read more

தேர்தலுக்காக 25,000ற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்-

paffrelஎதிர்வரும் பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 15,000 கண்காணிப்பாளர்களை தாம் நியமிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தினை முழுமையாக கண்காணிப்பது தபால் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு தேர்தல் தினத்திற்கான கண்காணிப்பு மற்றும் நடமாடும் சேவைகளின் கண்காணிப்பு என நான்கு பிரிவின் ஊடாக தமது கண்காணிப்பாளர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை எதிர்வரும் தேர்தலின் நிமித்தம் 10,000 கண்கானிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். திறைமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாள் ரசங்க ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சின்னத்தை மாற்றுவதற்கு அனுமதி-

electionநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 1981ஆம் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 12.1ஆம் பிரிவுக்கமைய இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். சின்னங்களை மாற்றுவது தொடர்பான குறித்த அறிவிப்புக்கள் கட்சியின் செயலாளர் ஊடாக எழுத்துமூலம் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்கள், ஏற்கெனவே கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. கட்டுப்பணத்தை அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை செலுத்தலாம். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும், செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் அலுவலக தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, பொதுஜன முன்னணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன். அதன் செயலாளராக பேராசிரியர் நாத் அமரகோன் செயற்படுகிறார். பொது பலசேனா இயக்கத்தின் அரசியல் முன்னணி, பொதுஜன முன்னணி கட்சியுடன் இணைந்து செயற்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதி-

election boxஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில்115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலக நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

சித்தன்கேணி வீதி திருத்தும் நடவடிக்கைகள்-

P1050755மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்த யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணி துறட்டிப்பனை ஆலயத்திற்கு செல்லும் வீதிய திருத்துவது தொடர்பில் அண்மைக்காலத்தில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாக தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா-(படங்கள் இணைப்பு)

YMHA  (1)யாழ். தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு நேற்றும் இன்றும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றது. இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதலாம் நாள் அமர்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதுவர் திரு அ.நடராஜன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தாசபை தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அ.சண்முகதாஸ், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் திரு. ஆறு திருமுருகன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சிறீமோகன், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.சோ.சுகிர்தன், தெல்லிப்பளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திரு. கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி நிகழ்வுகளின்போது நாட்டியாஞ்சலி, சிவதாண்டவம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more

தமிழீழ  மக்கள்   கல்விக்கழகம்  நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2015) சூறிச் மாநிலத்தில்-

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

unnamedதமிழீழ மக்கள் கல்விக்கழகம் (05.07.2015) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்து. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 26வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்றவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.

Read more

மகிந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி-விமல் வீரவன்ச-

vimalஎதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிச்சயமாக போட்டியிடுவார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கூட்டணியிலேயே, தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள் சதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், அதன் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்தவுடன் பேசி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 1ஆம் திகதி அறிவிப்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

திருமலையில் இரண்டாம் நாள் சாட்சியங்கள் பதிவு-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான இரண்டாம் நாளுக்குரிய அமர்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினத்திற்கான விசாரணைகளின் நிமித்தம் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பமன அமர்வில் சாட்சியமளிப்பதற்காக 179 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை, ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட காணாமற்போனோரின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பையேற்று வருகை தந்தவர்களில் 159 பேரிடம் நேற்று சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் இன்றைய தினம் புதிதாக 168 பேரின் முறைப்பாடுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் ஆரம்பம்-

election boxபொதுத் தேர்தலுக்கான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 2000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட செலயகத்தில் இயங்கும் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப் படையிலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு-

airforceஇலங்கை விமானப் படையில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான, பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2009 ஜூன் முதலாம் திகதி முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் தப்பி ஓடியவர்கள் பொது மன்னிப்பு காலத்தில் முறையாக விமானப் படையில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொது மன்னிப்பு காலம் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பொது மன்னிப்பை பெற விரும்புபவர்கள் காலை 09.00 மணிமுதல் மாலை 03.00 மணிவரை கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்திற்கு சென்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

kandaiya school 26.06.2015 (1)முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ்.நவரட்னம் அவர்களின் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (26.06.2015) பிற்பகல் 1மணியளவில் யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் யாழ். மாநகர முதல்வர் எஸ்.எஸ் நவரட்னம் அவர்களது ஞாபகார்த்தமாக வெளிநாட்டில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றை வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இந்தவகையில் பன்னிரண்டாவது தடவையாக நேற்றையதினம் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நவரட்னம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக திரு. இ.சுத்தானந்தன் (சிறி) அவர்கள் இதற்கான முழு ஒழுங்கினையும் செய்திருந்தார்.

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் அதிபர் திரு. சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி. பேரின்பநாதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம், கல்வி வலயம்), திரு. சா.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல், வலிகாமம், கல்வி வலயம்), திருமதி அன்ரீன் வலன்ரீனா (கிராம சேவையாளர், கந்தரோடைப் பிரிவு), உபஅதிபர் திருமதி. த.நடேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின்போது வறுமைக்கோட்டின்கீழ் உள்ள 100ற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், சப்பாத்து தேவையுடைய பிள்ளைகளுக்கான சப்பாத்துக்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

Read more

தேர்தல் 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்பட்டியலின் கீழ் நடைபெறும்-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தல் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை வினவி, சகல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கட்சிகள் தனித்தோ, அல்லது கூட்டாகவோ தேர்தலில் போட்டியிடும் முறை குறித்து தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று ஆணையாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை வெளியீடு-

examகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதனிடையே பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதால், மீண்டும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீள ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. இதேவேளை, 5 ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம்திகதி நடைபெறவுள்ளதால், உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.