மாணவி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

pungudutive caseபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கொலை வழக்கு தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆகியோர் செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பான கட்டளைகளைப் பிறப்பித்த நீதவான், சந்தேகநபர்கள் விரும்பினால் அடுத்த தவணையில், அவர்கள் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளை பயன்படுத்துவதற்கும் அனுமதியளித்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாணவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமையில் ரி.ஜனகன், எஸ்.விஜயராணி, ஆ.கார்த்திகா, அம்பிகா சிறிதரன், கே.சுபாஷ் ஆகிய 6 சட்டத்தரணிகள் குழு ஆஜராகியது. சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களை பொலிஸார், நீதவானிடம் சமர்ப்பித்தனர். அத்துடன், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தலைமுடிகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன்போது, ‘ஏதாவது கூறவிருக்கின்றீர்களா?’ என சந்தேகநபர்களிடம் நீதவான் விசாரித்தபோது, ‘தங்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியதுடன், சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று தான் வெள்ளவத்தையில் இருந்ததாகவும் வெள்ளவத்தையிலுள்ள வங்கியொன்றின் ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியதாக’ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.இதன் பின்னர் நீதவான் சில கட்டளைப் பிறப்பித்தார்.

9 சந்தேகநபர்களும், சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவி கொலைசெய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிரேத பரிசோதனையின் பெறப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியிடம் பொலிஸார் ஒப்படைக்க வேண்டும்.

சந்தேகநபர் ஒருவர் கூறிய கருத்துக்கமைய வெள்ளவத்தை தனியார் வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராவில் பதிவாகிய மே 13ஆம் திகதி தொடக்கம் மே 14ஆம் திகதி வரையான காட்சிகளைப் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடமுள்ள சான்றுப் பொருட்கள் அனைத்து நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட வேண்டும்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய தொலைபேசி தொடர்பான பதிவுகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற கட்டளைகளை நீதவான் பிறப்பித்தார்.

கடந்த மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் முதல் மூன்று சந்தேகநபர்களும். அதன் பின்னர் 5 சந்தேகநபர்களும், சுவிஸ் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (‘பீ’ ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் பிரஜை கைது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பீ’ அறிக்கையானது பிழையானதாக உள்ளதென மாணவி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர். அந்த அறிக்கையில், மாணவி சடலமாக மீட்கப்பட்ட திகதி பிழையானதாகவும் சந்தேகநபர் 14ஆம் திகதி பொதுமக்களால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும், அவர் தொடர்பான சான்றுகள் எதுவும் இல்லாமையால் அவர் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து வெள்ளவத்தையில் வைத்து பிடிக்கப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு முரண்பட்டுள்ள அறிக்கை, பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றது. சுவிஸ் பிரஜையை தப்பிக்க வைப்பதற்காக அதிகாரிகள் சிலர் முயற்சித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுகின்றது என வித்தியா சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறினர். இதனையடுத்து ‘பீ’ அறிக்கையை சரியான முறையில் தயாரித்து மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.