பாகிஸ்தான் இராணுவத்தளபதி இலங்கைக்கு விஜயம்-

pakistan...பாகிஸ்தானிய இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் செய்யவுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல கிருஷாந்த டீ சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இங்கு வருகைதரவுள்ளார். 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ராஜாங்க செயலாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உட்பட பாதுகாப்பு தளபதிகளை சந்தித்து உரையாடுவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், இராணுவ பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜென்ரல் ரஹீல் ஷரீப்பின் தந்தையார் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அவரது சகோதரர்கள் இருவர் பல யுத்த முனைகளில் கடமையாற்றி பல விருதுகளை பெற்றவர்களாவர்.

கொக்காவில் பஸ் விபத்தில் நால்வர் பலி 35 பேர் படுகாயம்-

kokkavilகிளிநொச்சி பழைய முறிகண்டி கொக்காவில் – பனிக்கன்குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துளள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றின்மீது மோதிய பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது

மன்னார் விபத்தில் பெண் உயிரிழப்பு, மலையகத்தில் இரு விபத்துகள்-

mannar accidentமன்னாரில் நடைபெற்ற திருமண வைபவத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறிய ரக லொறி, மன்னார் பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியானதுடன் 8பேர் படுகாயமடைந்துள்ளனர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற பஸ் மற்றும் கெப் வாகன விபத்துகளில் 28பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்ஸொன்று நேற்று இரவு, பெரகல, பிளக்புட் பகுதியில் வீதியை விட்டு கற்பாறையொன்றில் மோதியதில் 20பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கதிர்காமத்திலிருந்து நுவரெலியா நோக்கிசென்ற கெப் வாகனமொன்று இன்று அதிகாலை வெலிமடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்துள்ளனர் இவ்வாறு காயமடைந்தவர்களில் இரு குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு-

suicideவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெய்தகுளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். தாய் அண்­மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்­டிற்கு செல்ல பொலிஸ் நிலை­யத்தில் சான்­றி­த­ழொன்­றினை பெற சென்றிருந்த சம­யமே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளதென பிர­தேசவாசிகள் தெரிவிக்­கின்­றனர். இச்சம்­பவம் தொடர்­பாக ஓமந்தை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டுள்ளனர்.

சீன கப்பல் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் அதிகமானவர்கள் மாயம்-

ffgfசீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹ_பி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது. இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேதனை மிகுந்த வித்தியாவின் கொடூரக் கொலையை வைத்து அரசியல் செய்வது மிகக் கேவலமானதாகும்-

67676வித்தியாவின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம். இதில் மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு நாம் தப்பிக் முடியாது. இந்த ஈனச் செயலை செய்தது எம்மினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை வெட்கத்துடன் ஓத்துக் கொள்ளவேண்டும். முன்பு இடம்பெற்ற இதே போன்ற பாலியல் பலாத்காரம், வன்புணர்வு மற்றும் படுகொலைகளில்; ஈடுபட்டவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் குற்றஞ் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் முக்கிய பிரமுகர்கள் துணையுடன் கொழும்பிற்கு தப்பி ஓடிவிட்டார். எப்படியோ பொலிசார் அவரை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறான சம்பவங்களினால் ஆத்திரம் அடைந்த மக்கள், நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற எல்லை மீறிய ஆதங்கத்தின் வெளிப்பாடே நீதிமன்றத்தின் மீது நடந்த விரும்பத்தகாத சம்பவம். அதற்கு அரசியல் சாயம் பூசுவதோ, புலிச்சாயம் பூசுவதோ வெட்கக் கேடான விசயம்,

நம்மவர்கள் செய்தபடியால், எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை, எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை, வேறு குழுவினர்களினால் திட்மிட்டு செய்த செயல் என்று, யார் யார் மீதோ பழியைப் போட்டு விட்டு, பாராளுமன்றத்திலும், வெளியிலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பேசும் அளவிற்கு இது அரசியலாக்கப்பட்டுள்ளது. வெட்கித் தலைகுனிய வேண்டிய கீழ்த்தரமான விசயத்தைக் கூட அரசியலாக்கப் பார்க்கின்றோம்.

வித்தியாவின் கொலை போன்று ஒரு கொடூர சம்பவம் நடக்காமல் இருக்க ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கவேண்டும். சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும் புதிதாக சட்டத் திருத்தத்தை உருவாக்கி, குற்றவாளிகள் இவ்வாறான ஈனச் செயலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையான தண்டணையை வழங்க வேண்டும். அதன் மூலம் இனி எவரும் இவ்வாறான ஒரு இழிசெயலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தங்களின் கொடூர செயலால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

வடமாகாணம் முழுவதுமாக செயலமர்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் எம் சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படவேண்டும். ஏனெனில் வித்தியாவின் சம்பவத்தின் பின்பும் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த பின்னரும் பரந்தனிலும், நெடுந்தீவிலும் இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமே தவிர அடுத்தவர் மேல் பழி போடுவதை தவிர்த்து இந்த சமூக சீர்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதைவிடுத்து ஈனச்செயல் செய்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன், எந்த சமூகத்தைச் சேர்ந்தவன், எந்த கட்சியைச் சேர்ந்தவன் என்று தேடிக் 

கண்டுபிடித்து, முடிந்தால் எமக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களுடன், குற்றவாளியோ, அல்லது குற்றவாளியின் சாயலை ஒத்த வேறு ஒரு நபருடனோ, எப்போதோ எடுத்த புகைப்படத்தையும் இணையதளங்களில் போட்டுக்காட்டி, அவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில்தான் தொடர்பு என்று, குற்றவாளிகளை அந்தக்; கட்சிகளுடன் தொடர்பு படுத்திவிட்டு, அப்பாடா குற்றவாளி எங்கள் கட்சியையோ, அமைப்பையோ, சமூகத்தையோ சேர்ந்தவன் அல்ல நாங்கள் தப்பிவிட்டோம் என்று, தேர்தலில் தங்கள் கட்சிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவே, மற்றவர்களை குற்றஞ்சாட்டி, தம்மை புனிதர்களாக தோற்றத்தை ஏற்படுத்தி, இந்த வேதனை மிகுந்த சம்பவத்தை வைத்தும், அரசியல் செய்வது என்பது மிகக்கேவலமானதாகும்.

தருமத்தின் தலைமகன் என்று நம்மால் புராண இதிகாசங்களில் பேசப்படும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான தருமன்தான், தன் மனைவி திரௌபதையை வைத்து சூதாடினான். கெட்டவர்களான கௌரவர்கள் பக்கம்தான் கொடைவள்ளல் கர்ணனும், நீதி நெறிமுறை தவறாத வீஷ்மர், விதுரர், துரோணாச்சாரியார் போன்றவர்கள் இருந்துள்ளார்கள். அது மட்டுமல்ல இராமாயணத்தில் இராவணன், சீதையை பாது காப்பாகவே வைத்திருந்தான். ஆனால் இலட்சுமணன் சூர்ப்பநகையை பெண் என்றும் பாராமல் அவள் மூக்கை அறுத்து அவமானப்படுத்தி அனுப்பினான். ஆனால் பெண்ணின் மூக்கை அறுத்தவர்களும், பெண்ணை வைத்து சூதாடியவர்களும் நம்மால் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் எந்த செயல் செயதாலும் அது நல்லதாகவே இருக்கும் என்று ஏற்றுக்கொள்கின்றோம். ஏன் இராமாயணத்தை முதலில் எழுதிய வான்மீகி முனிவர்கூட ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளைக்காரனாக இருந்தவர்தானே. எனவே இருக்கும் இடம் முக்கியமில்லை. இருப்;பவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதுதான் முக்கியம்.

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான, மனித சமூகத்திற்கே ஒவ்வாத, இழி செயல்கள் குறிப்பாக வட மாகாணத்தில் அதிகரித்துள்ளன என்பதை அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே அத்தனை குற்றவாளிகளுக்கும் விரைவாக கடுமையான தண்டணை பெற்றுக் கொடுக்கவேண்டும். இவ்வாறான இழி செயலகள் நடக்காமல், தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரினதும் கடமையும், பொறுப்புமாகும். பொறுப்பைத் தட்டிக்கழிக்காது, ஒற்றுமையுடன் செயற்பட்டு, இனிமேலாவது இவ்வாறான அசிங்கங்கள் நம் சமூகத்தில் நடந்துவிடக் கூடாது, என வித்தியாவின் ஆத்மா மீது சத்தியம் செய்து உறுதி எடுத்துக் கொள்வோம்.

இரா. சங்கையா,
நிர்வாகச் செயலாளர்- த.வி.கூ.,
முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர்;.