இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு-

americanஇலங்கையில் வலுவான ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கையின் சட்டம் மற்றும் பொருளாதாரத் துறையை வலுப்படுத்த அமெரிக்க உதவி புரியும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் தெரிவித்துள்ளார். ஜனநாயக தேர்தல் மாற்றம் இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், பிரிவினை அரசியல் மற்றும் போலி முதலாளித்துவத்தில் இருந்து இலங்கையை மாற்றி நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் இந்த புதிய பாதை நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும் சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட ஆட்சித் துறையை வலுப்படுத்த உதவி அளிக்கும் என்றும் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவம், விளக்கமறியில் நீடிப்பு-

ereயாழ். நீதிமன்றம்மீது கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 43 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே.கஜநிதிபாலன், உத்தரவிட்டுள்ளார். யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ்.நகரில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 47பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 45பேரும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரு பிரிவான 43பேர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் திஸ்ஸவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை-

tissa atanaikeமுன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என போலி ஆவணமொன்றை வெளியிட்டமை தொடர்பிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒத்திவைப்பு-

parliamentநாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுகாலை 9.30க்கு கூடியது. விசேட அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கூடப்பட்டநிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்;டது. இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்தே நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரபல பாடசாலையில் சடலம் மீட்பு-

45555கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் நீச்சல் தடாகத்திலிருந்து 55 வயதான ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலேயே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவரான நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன்.

பண மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி முறைப்பாடு செய்ய நடவடிக்கை-

employmentதென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வலியுறுத்தியுள்ளது. தகைமைகளை பூர்த்திய செய்தவர்களில் தெரிவு செய்யப்படும் சிலருக்கு மாத்திரமே தென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார். இந்த தெரிவு தென்கொரிய அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது. தொழில் வாய்ப்புக்களுக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையுடன் இலங்கையர்கள் தொடர்புபடுவதில்லை. தென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் வசூலிப்போர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வையுங்கள் என்று பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மக்களைக் தெரிவித்துள்ளார். 0112 879900 அல்லது 0112 879902 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவில் இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

வலிமேற்கு திருவடிநிலைப் பகுதி சுற்றுலாவுக்குரிய பிரதேசமாக முன்மொழிவு-

dfddfdவலி மேற்கு பிரதேசத்தின் திருவடிநிலைப் பகுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் குழவினர் குறித்த பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக்கும் பொருட்டு அண்மையில் சென்று பார்வையிட்டுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறும்போது, 5 ஆண்டுத் திட்டத்தில் குறித்த பிரதேசம் சுற்றுலாவுக்குரிய பிரதேசமாக முன்மொழியபபட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் இவ்வாறான நிலை அமையுமாயின் இப்பகுதி மிகச் சிறப்பாக மாற்றமடையுமெனவும் கூறினார்.