மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி உதயம்-

tamil mutpokku koottaniமலைய மக்களின் அபிவிருத்தி, அரசியல் நலன்களை காக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதி தலைவர்களாக பழனி திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ், பொருளாளராக தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் திலகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டணி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், இக்கூட்டணி வெறுமனே தேர்தல் கூட்டணி அல்ல என்றும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் மலையக மக்களின் அபிவிருத்தி நலன்சார் கூட்டணி என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் தனித்தனியே இருந்து போராட்டங்களை முன்னெடுத்து எதனையும் சாதிக்க முடியாது போனதால் பல இணக்கப்பாட்டு அடிப்படையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த கூட்டணி மூலம் அனைத்து மலையக தமிழ் மக்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன், மலையக மக்களின் தேசிய ரீதியில் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகளை சர்வதேச அளிவில் கொண்டு தீர்த்துக் கொள்ள கூட்டணி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த கால முரண்பாடுகள், கட்சி, பிரதேச வேறுபாடுகள் இன்றி அனைவரது இணக்கத்தின் பேரில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த கூட்டணி மூலம் வடக்கு கிழக்கிற்கு வாழும் 15 லட்சம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இது ஒரு வரலாற்று தருணம் என்றும் இவ்வாறு கூட்டணி உருவானதை நாட்டில் உள்ள சிங்கள மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் வட, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களது நலனிலும் இந்த கூட்டணி அக்கறை செலுத்தும் என அவர் கூறினார். பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதிலே பல விட்டுக் கொடுப்புக்கள் இருப்பதாகவும் எதிரே சால்களும் நிறைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சவால்களுக்கு முகங்கொடுத்து இந்தக் கூட்டணி முன்னேறிச் செல்லும் என அவர் குறிப்பிட்டார். மலையக மக்கள் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, மலையக தேசியம் போன்றவைகள் பற்றி இந்தக் கூட்டணி அதிக கவனம் செலுத்தும் என மனோ கணேசன் தெரிவித்தார்.