யாழ். நீதிமன்ற தாக்குதல், அறுவருக்கு பிணை-
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரணியின்போது நீதிமன்றத்தின்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 40 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு 2லட்சம் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 பேரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். இதில் ஒருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவில்லை. அவர் காயம் காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 132 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 8 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா-
நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் ரூமி மர்சூக், அவரது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்ததையடுத்து, இன்று அமுலுக்கு வரும் வகையில், அவர் நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக அமைச்சின் செயலாளரிடம் அவரது இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் கையளித்திருந்தார். கடந்த 8 வருட காலமாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் பதவியிலிருந்த இவர், அவருடைய சில தனிப்பட்ட தேவைகளுக்காகவே பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை-
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, நாளையதினம் தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இத்தகைய பெற்றோர்கள் இந்த நடமாடும் சேவை மூலம் பயனைப் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் வாள்வெட்டு, நால்வர் படுகாயம்-
கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணிவண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து பிரதி அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடு-
மேலும் ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன்படி விஜய தஹனாயக்க, விக்டர் அந்தனி, எரிக் வீரவர்தன மற்றும் டுலிப் விஜயசேகர உள்ளிட்ட ஐந்து பேர் இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளனர். பெரும்பாலும் அவர்கள் இன்று மாலை பதவி ஏற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஐந்து பேர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக கடந்த 29ம் திகதி பதவி ஏற்றிருந்தனர்.
இலங்கை அகதியை நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை-
இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனகன் சிவநாதன் என்ற 22வயதான அகதி சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, பிரித்தானியாவின் மோர்டன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது. எனினும் அவர் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்காக, அவர் தரப்பு சட்டத்தரணியால் கடந்த முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆவணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதில் அவர் இலங்கையில் இருக்கும்போது துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை 15ம் திகதி முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என கூறப்படுகின்ற நிலையில், அதற்குள் அவர் நாடுகடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா தேரர்கள் 6பேருக்கு எதிராக வழக்கு-
பதுளை மாவட்டம் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் தேசிய பல சேனாவின் உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் 2014ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் அறுவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரத்தை ஜூலை 19ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பியந்த லியனே, பொலிஸாருக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு விபத்தில் மூவர் காயம்-
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் ஏ-35 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ்ஸ_ம், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கானா எரிபொருள் நிலையத்தில் வெடிப்பு, 70 பேர் பலி-
கானா நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தினால் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக அந்த நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமி 8மணித்தியாலங்ளில் மீட்பு-
களுத்துறை, மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9வயது சிறுமியொருவர் 8மணித்தியால தேடலின்பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காட்டுப் பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளார். அருகிலுள்ள கடையொன்றுக்குச் சென்ற போதே சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தின் போது அதனுடன் தொடர்புடைய நபர் அப்பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்தே தேடுதல் நடத்தினர்.