புலிகள் சரணடைவது இந்தியாவுக்கு தெரியும்-

ananthiஇறுதி யுத்தத்தின்போது, படையினரிடம் புலிகள் சரணடையவிருந்த விவகாரம் தொடர்பில் இந்தியா உட்பட சர்வதேசம் அறிந்திருந்தது என புலிகளின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் சின்னத்துரை சசிதரனின் (எழிலன்) மனைவியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன், நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் அனந்தி சசிதரன் சாட்சியமளித்தார். மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அனந்தி தனது சாட்சியத்தில், புலிகளின் சரணடைவு விவகாரமானது, சர்வதேசத்தின் ஏற்பாட்டில், முக்கியமாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றார். அத்துடன், தனது கணவர் எழிலன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியூடாக பாதுகாப்பு தரப்பிடம் சரணடையவிருந்தார். இதனை தான் கணவரின் அருகிலிருந்து செவிமடுத்ததாக அனந்தி குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்கு நீதவான் எம்.எஸ்.ஷம்சுதீன் ஒத்திவைத்துள்ளார்.

வித்யா கொலையைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்பாட்டம்-

vidyaபுங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து, புத்தளத்தில் இன்று அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்றுகாலை புங்குடுதீவு மாணவிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், பாடசாலையில் இருந்து ஆரம்பமான அமைதிப் பேரணி, உடப்பு வைத்தியசாலை சுற்றுவட்டத்தை சென்றடைந்து, மீண்டும் பாடசாலையை அடைந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான சுலோகங்களை ஏந்தியிருந்த மாணவர்கள், அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டதுடன், புங்குடுதீவு மாணவிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.

நீதிமன்ற தாக்குதல் கைதான இருவருக்கும் விளக்கமறியல்-

jaffna courtsயாழ், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்றையதினம் இந்த இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அரியாலை மற்றும் மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரவிராஜ் கொலை தொடர்பான முச்சக்கரவண்டி மீட்பு-

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார். மேலும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார். இதேவேளை ரவிராஜ் அவர்களின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இராணுவத்துக்கு உரித்துடையது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.

விகாரை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது-

viharai arrestமுல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளனர். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவடன், காணி உரிமையாளர்கள் யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானித்திருந்தனர். இதன்படி காணி உரிமையாளர்கள் மூவரும் இன்றுகாலை விகாரை அமைக்கப்படும் இடத்துக்கு முன்பாக அமர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் படையினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது. பிந்திய தகவல்படி அவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச மத்தியஸ்த நிலைம் திறந்து வைப்பு-

tradeகொழும்பு உலக சந்தை நிலையத்தில் சர்வதேச மத்தியஸ்த நிலையத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார். இது இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை கொண்டு வருவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இன்றைய வைபவத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இலங்கையில் இத்தகைய நிலையமொன்று இல்லாததால் சிங்கப்பூர் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச மத்தியஸ்த சேவைகளைப் பெற வேண்டி இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இச்சேவையைப் பெறுவதால் பெருந்தொகை பணத்தையும் செலவிட நேரிட்டது. 1995 ஆம் ஆண்டின் 11 ஆவது மத்தியஸ்த சட்டத்தின் கீழ் உள்ளூரில் இரு மத்தியஸ்த நிறுவனங்கள் இலங்கையில் இயங்கிய போதும், சர்வதேச மத்தியஸ்த நிலையம் உருவாவது இதுவே முதல் தடவையாகும். இந்த நிலையத்தை அமைக்க 100 மில்லியன் ரூபாவை நிதி அமைச்சு செலவிட்டுள்ளது. உலகில் எந்த நாட்டுடனும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கும், சர்வதேச மத்தியஸ்த செயற்பாடுகளுக்கும் சேவைகளை இந்த நிலையம் மூலம் வழங்கலாமென நீதி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீட்டு வாசலில் கிடந்த மோட்டார் குண்டு மீட்பு-

motorயாழ். அரியாலை பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முள்ளி வீதி – அரியாலை பகுதியில் உள்ள வீட்டு வாயிலின் முன்பாக குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம், இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டினை மீட்டுள்ளனர்.