மக்களின் காணிகளை மீளளிக்க வேண்டும்- இரா.சம்பந்தன்-

sampanthanஇலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், பொது மக்கள் தங்களின் சொந்த காணிகளில் குடியேற்ற அனுதிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் காணிகளில் குடியேற்றப்படுவது கட்டாயமாகும். இதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 15ல் கையளிப்பு-

missingகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அது செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 1990 ஆண்டு ஜுன் 10ம் திகதிமுதல் 2009ம் ஆண்டு மே 19ம் திகதி வரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு விசாரணை நடத்திவந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்-

tna (4)தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் உள்ளடங்கியிருக்கும் கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை, தமிழர் விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன இணைந்து, இந்த கூட்டத்தை கூட்டுமாறு, கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தன. இதனடிப்படையிலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதன்போது தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விசேட குழு ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 வீதமான மாணவர்கள் போதைப் பொருள் பாவனை-

world healthஇலங்கையின் பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. 13வயதுக்கும் 15வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த பழக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் இளம் பருவத்தினர் மத்தியில் காணப்படும் புகையிலை சார்ந்த போதைப்பொருள் பாவனை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் பாரதூரமானவை என அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அபாயத்திலிருந்து பாடசாலை மாணவர்களை விடுவிப்பதற்கு விரிவான செயற்றிட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும் என டொக்டர் நிலங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உளநலம் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு-

ertrrகிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னிப்பகுதிகளில் கடந்த யுத்தத்தின் பின்னர் உளநலம் பாதிக்கப்பட்டோரின் தொகை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு உளநோய்க்கு உள்ளானோரில் பலர் தற்கொலை செய்து கொள்வதை காணமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள மலையாளபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களுக்குள் ஐந்து பேர்வரை உளநலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பரந்தனில் உள்ள கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றில் உளவள சிகிச்சைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெறவரும் மனநோயாளர்களின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்துவேட்டை-

signமன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி 2 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கை இன்று முற்பகல் 10மணிக்கு, மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாணசபை உறுப்பினர் ரிபாகான் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வடபகுதி முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆதரவுக் கையெழுத்து பெறும் மற்றுமொரு நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்-ஆ தொழுகையைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள பள்ளிவாசல்களில் இடம்பெறவுள்ளது.

வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு-

fddநாட்டில் உள்ள பிரதான வீதிகளில் 86 வீதிகளில் வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. சாரதிகள் தங்களுடைய வாகனங்களின் வேகத்தில் கட்டுப்பாட்டினை மீறி செலுத்துவதனால் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுக்கும் வகையிலேயே இந்த நடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு, 10பேர் காயம்-

accidentஅநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 1வயதினையுடைய குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 10பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த உழவு இயந்திரத்துடன் பௌசர் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பௌசர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.