கனிமொழி மறுப்பார் என எனக்குத் தெரியும்-அனந்தி சசிதரன்-

ananthiஇறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் மற்றும் மேலும் நால்வர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறி அவர்களை மீட்பதற்கான ஆட்கொணர்வு மனுவை எழிலனின் மனைவி மற்றும் 4 பேரின் உறவினர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இது குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 4ஆம் திகதி விசாரணையின்போது, அனந்தி சாட்சியமளிக்கையில்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், குறிப்பாக கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தனது கணவர் எழிலன் சரணடைவது தொடர்பில் உரையாடியதாகவும் அதனை தான் கணவர் அருகில் இருந்து செவிமடுத்ததாக கூறியிருந்தார். அனந்தியின் இந்தக் கருத்தை மறுத்த கனிமொழி, ‘யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர் புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது. யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும்போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா? எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் அனந்தி கூறுகையில், இறுதி யுத்தம் நடைபெற்றபோது புலிகளை இராணுவத்திடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர் தான் கூறவில்லையென கூறலாம். ஆனால் அவரது மனசாட்சிக்குத் தெரியும் தான் கதைத்து தொடர்பில். கனிமொழி கூறியிருந்தார் முன்னணி தலைவர்களில் ஒருவர் எழிலன் இல்லை என. அவ்வாறு என்றால் புலிகளின் முன்னணி தலைவர்களுடன் கனிமொழி தொடர்புகளைப் பேணியுள்ளாரா? நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்கு தெரியும். பல நாடுகள் இணைந்து யுத்தத்தை முடித்துவைத்தன. ஆனால் இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றது. இதில் இந்திய மத்திய அரசாங்கம் அதிக இடத்தைப் பெற்றுள்ளது என்றார்.