புதிய தேர்தல்முறை தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு கோரிக்கை-

maithriபுதிய தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஐதேக முன்வைத்துள்ள தேர்தல் முறைமை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. யோசனைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பு சமர்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார். 20ம் திருத்தம் தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குழுவொன்றை நியமிப்புமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் நாளை மாலை கூடி தேர்தல் முறை குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதமருடன் எவ்வித இணக்கப்பாடுகளும் தன்னால் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி சகல உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிமன்ற தாக்குதல் வழக்கு, மேலும் 15பேர் பிணையில் விடுதலை-

courtsஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது யாழ் நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 15 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்கள் இரு பிரிவுகளாக இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். முதல்பிரிவில் 33 சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் 12பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இரண்டாவது பிரிவின் கீழ் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் மூவர் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று விடுவிக்கப்பட்ட 15பேரும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 32 சந்தேகபர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தல் பழைய முறைப்படியே நடைபெறும்-

parliamentஇலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என வெளியுறவுத்துறை பதில் அமைச்சர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார். புதிய தேர்தல் நடைமுறையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும். எனினும் புதிய தேர்தல் நடைமுறையில் 125 இடங்கள் தொகுதி அடிப்படையிலும் இதர 100 இடங்களில் 75 இடங்கள் விகிதாசார அடிப்படையிலும் எஞ்சிய 25 இடங்கள் தேசியப் பட்டியலின் கீழான நியமனங்கள் மூலமும் நிரப்பப்படும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது எனவும் அஜித் பெரேரா கூறுகிறார். தற்போதுள்ள நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படும் சூழலில் அமைச்சரவையின் இந்த முடிவு வந்துள்ளது. ஆனாலும் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் முழுமையாக விகிதாசார அடிப்படையிலேயே நடைபெறும் எனவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதேவேளை தேர்தல் நடைமுறையில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து பல கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளையும் அமைச்சரவை நிராகரித்துள்ளது.

வேள்;ட்விசன் நிறுவன அனுசரணையுடன் பிரதேச சபை உப விதிகள் தயாரிப்பு-

dfdfdவேள்ட்விசன் நிறுவன அனுசரணையுடன் வலிமேற்கு பிரதேச சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளுக்கான உப விதிகள் தயாரிப்பு நடவடிக்கை அண்மையில் யாழ் டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வலிமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சாரதா உருத்திரசாம்பவன் ஆகியோர்; இணைந்து நடைமுறை விடயங்களை ஆராய்ந்தனர். இதன்போது வேள்ட்விசன் நிறுவன யாழ் முகாமையாளர் திரு அன்டனி ஜெராட் அவர்களும் இணைந்து திட்டத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கில் மிக நீண்டகாலமாக உள்ளுராட்சி சபைகள் இயங்காது இருந்த நிலையில் பல உப விதிகள் தயாரிப்பு அற்ற நிலையில் இருந்தமையும் தற்போது இவ் உப விதிகள் ஆக்கப்படுவதும் மக்களுக்கான நல்ஆட்சியின் உதயம் என குறிப்பிட முடியும் என வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

20ஆம் திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்-

maithri 220ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை, புதிய தேர்தல் முறைமைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 125 உறுப்பினர்கள் விருப்பத்தெரிவு அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளதோடு 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

காசியப்ப மன்னரின் கிரீடம் தேடிச் சென்றவர்கள் கைது-

sigiriaசீகிரியவை ஆட்சி செய்த காசியப்ப மன்னரின் கிரீடத்தை புதையல் பொருளாக எடுக்கச்சென்ற 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் இருப்பதாக வெளியான தகவலுக்கு அமைய, புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

பம்பரகலை குட்டிமலை தீ விபத்தில் 20 வீடுகள் நாசம்-

lindulaநுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவின் பம்பரகலை குட்டிமலை தோட்டத்தில் இன்றுகாலை பரவிய தீயினால் 20 தொழிலாளர் குடியிருப்புக்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் குறித்த வீடுகளில் வசித்துவந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் தீயினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. லிந்துலை பொலிஸார், மக்களின் ஒத்துழைப்போடு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை மஸ்கெலியா கவரவில தோட்டம் ஏ பிரிவு தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் இன்று அதிகாலை பரவிய தீயினால் இரு குடியிருப்புக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது. தீயினால் குறித்த வீடுகளில் வசித்துவந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்போது இடம்பெயர்ந்த 8பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்- வட மாகாணசபை-

northern_provincial_council1வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 30ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா அரசஅதிபர் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்துள்ளார். இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் எடுக்கப்பட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அரச அதிபரை மாற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதுவரை அவரை மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே அதற்கான நடவடிக்கையை மிகவிரைவில் எடுக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவைத்தலைவரின் முன்பாக தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்து சென்று தங்களுடைய ஆட்சேபனையினை வெளியிட்டுள்ளனர். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத்தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.