இருபதாவது திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

parliamentஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற அமைச்சரவையின் விஷேட கூட்டம் இன்று ஜனாதிபதியினால் கூட்டப்பட்டது.
தேர்தல் தொகுதிவாரியாகவும் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திருத்தத்தில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இலிருந்து 237 அதிகரிக்கப்படுகின்றது.
தேர்தல் தொகுதி வாரியாக 145 பேரும் மாவட்ட மட்ட விகிதாசார அடிப்படையில் 55 பேரும் தேசியப் பட்டியலின் மூலம் 37 பேரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யும் வகையில் இந்த திருத்தம் அமைவதாக அமைச்சரொருவர் கூறினார்.
கடந்த அமைச்சரவயில் எதிர்ப்புகளை வெளியிட்ட சிறுபான்மை இன கட்சிகளின் அமைச்சர்களால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படடதாக கூறப்படுகின்றது.
புதிய நாடாளுமன்ற தேர்தல் முறை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தொகுதி வாரி பிரதிநிதித்துவம் இல்லை. விகிதாசார அடிப்படையில், மாவட்ட ரீதியாக 196 பேரும் தேசியப் பட்டியல் மூலம் 29 பேரும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியேறிகள் வருவதை தடுக்க அனைத்தையும் செய்வோம் – ஆஸ்திரேலிய பிரதமர்

asylumஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதை தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கடற்கரைகளை குடியேறிகள் படகுகள் வந்தடைவதை தடுக்க ஆக்கத்திறனுடனான யுக்திகள் அனைத்தையும் தாம் கையாள்வோம் என்றும், அவை வெற்றிகரமான வழிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு படகில் வந்த குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப, ஆஸ்திரேலியா முப்பதினாயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியதாக இந்தோனேசிய பொலிஸ் தலைமை அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் நியூசிலாந்தை நோக்கி படகில் சென்று கொண்டிருந்த தம்மை, வழி மறித்த ஆஸ்திரேய அதிகாரிகள், தமது படகு ஓட்டிகளுக்கு லஞ்சக் கொடுத்து, தம்மை ரகசியமாக இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கயை சேர்ந்த தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.