20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுசில்
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது பெரிய விடயமல்ல. சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையினால் யாழ்ப்பாணத்தின் உறுப்பினர் தொகை குறைவடையும் அபாயம் உள்ளது. அத்தோடு மாத்தறையிலும் அந்த நிலைமையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தேர்தல் முறைமை மறுசீரமைப்பினையும் உள்ளடக்குமாறே அரசாங்கத்திடம கோரினோம். அதுவே மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு நடைபெறவில்லை.
எவ்வாறாயினும் தேர்தல் மறுசீரமைப்பினை 20 ஆவது திருத்தச்சட்டமாக பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். இதன் படி தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு தற்போது அமைச்சர வையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக் கப்பட்ட திருத்தமே ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை 225 ஆக திருத்தப் – பட்டுள்ளது. இந்த திருத்தத்தினால் சிறுபான்மையின கட்சிகளுக்கும் சிறிய அர சியல் கட்சிகளுக்கும் பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மறுசீரமைப்புக் குழு என்ற வகையில் அனைத்துக் கட்சிகளுடனும் சிவில் அமைப் புகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே பாராளுமன்ற ஆசனங்களின் தொகையை 255 ஆக அதிகரித்தோம்.
இருந்தபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 255 ஆக மாற்றம் செய்தமை நாட் டுக்கு உகந்ததல்ல என ஐக்கிய தேசியக் கட்சி வாதாடுகிறது.அவ்வாறாயின் 1977 ஆம் ஆண்டு 170 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன 225 ஆக அதிகரித்தார்.
எனினும் அதன்போது எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சனத்தொகையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அவ்வாறாயின் அதற்கேற்றால் போல் பாராளுமன்றத்தின் உறுப்பினர் தொகையும் அதிக்கரிக்கப்பட வேண்டும்.
இதன் பிரகாரமே அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையை பெற்று 255 ஆக ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம். எனவே இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் பங்காளிக்கட்சிகளுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அதன் பின் இது குறித்தான திருத்தங்களை முன்வைப்போம்.