தமிழ் டயஸ்போராக்கள் இணைந்து செயற்பட விருப்பம் – மங்கள சமரவீர

mangalaபிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழர்கள் விருப்பம்: உலகத் தமிழர் பேரவையுடன் இடம்பெற்ற கலந்துடையாடல் இலங்கையில் தேசியத்தை கட்டியெழுப்ப உதவும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் சமூகத்தினரிடையே இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும். இலங்கை பிரஜைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு தமிழ் டயஸ்போராக்களுடன் கலந்துரையாடி அவர்களை ஈர்ப்பதும் முக்கியம் என்றும் பெரும்பான்மையான தமிழ் டயஸ்போராக்கள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம்

childrenசிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம் யூன் 12 ம் திகதி ஆகும். அந்தவகையில்  இன்று  காலை ஞாயிற்றுக்கிழமை வட்டகொடை நகரத்தில்  பிரிடோ நிறுவன வழிக்காட்டலில் இயங்கும் சிறுவர் கழக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 இற்கு மேற்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் தலவாக்கலை பூண்டுலொயாவிலிருந்து பேரணியாக வட்டக்கொடை தோட்டம் வரை சென்றனர். இதன் போது சிறுவர்கள் வித்தியாவின்  கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதுடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்குமாறு கோரியும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான  பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துக்கொண்டனர். இதேவேளை மற்றுமொரு பேரணி நானுஓயா பிரதான நகரத்தில் இன்று  காலை முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்ப்பாட்டில் நடைப்பெற்றது. இப்பேரணியில் 150 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் நானுஓயா பொலிஸ் பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்  ரசிக்கா   கலந்து கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக  விளக்கம் கொடுத்தமை குறிப்பிடதக்கது.

வர்த்தகரின் மகனை கடத்தி கப்பம் பெற்றவர் கைது – வவுனியா

police ...வவுனியா பிரபல வர்த்தகரின் 5 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனின் தந்தையிடம் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் அத் தொகையை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் 10 இலட்சம் தருமாறு கடத்தப்பட்ட நபரினால் வர்த்தகரிடம் கோரப்பட்டிருந்தது. இதன் படி 10 இலட்சம் ரூபா குப்பை மேடொன்றில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறுவன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து வர்த்தகர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். உடனடியாக சிறந்த முறையில் செயற்பட்ட வவுனியா பொலிஸார் கடத்திய நபரை மறுநாள் கைது செய்ததுடன் விளக்கமறியலில் வைப்பதற்கு  நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்று விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்ட நிலையில் நிதி மோசடி தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது – வவுனியா

arrestவவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயகெனடி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;- பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுமிகள் மீது தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பூவரசன்குளம் பொலிஸாரிடம் அப்பகுதி மக்களும் தாய் சிறுவர் இல்ல அருட் சகோதரி ஒருவரும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதன் பிரகாரம் சமய பாடம் கற்பிற்கும் குறித்த ஆசிரியர் சில நாட்களாக தலைமறைவாக இருந்தார். எனினும் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ.ம.சு.முன்னணிக்குள் பிளவு

upfaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, புதிய தேர்தல் திருத்தம் அடங்கிய 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென கூட்டணியின் மற்றுமொரு சாரார் வலியுறுத்தியுள்ளதாலேயே இவ்வாறான கருத்து முரண்பாடுகள் வலுவடைந்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை இல்லாதொழித்து புதிய தேர்தல் திருத்தம் அடங்கிய 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுவே தற்போதுள்ள மிக முக்கிய விடயமாகுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் பார்க்கின்ற பொழுது நம்பிக்கையில்லா பிரேரணை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பதாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் பிரிவினர், நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் பிரதமரை பதவி நீக்கம் செய்து சிறீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமொன்றை அமைத்து அதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றனர்.