பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகள் நான்கிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிணையாளர்கள் இருவரும் அரசாங்க ஊழியராக இருக்கவேண்டும் என்பதுடன் அந்த பிணையாளர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைர் பி.பீ. திகலக்கசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்களை 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி-
கடந்த மே 13ஆம் திகதி வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் பயங்கரவாதக் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று அனுமதித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின் தாயார், சகோதரர், சட்ட வைத்திய அதிகாரி, புலனாய்வு அதிகாரி, ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் சாட்சியமளித்தனர். கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொலிஸார், மன்றில் இன்று சமர்ப்பித்தனர். அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், இந்தக் கொலை வழக்குடன் தொடர்புபட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்ய நீதவான் அனுமதி வழங்கினார். இன்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்திருந்த மாணவியின் தாய் மற்றும் சகோதரர் மன்றிலேயே மயங்கி வீழ்ந்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்-
உலகின் பெரிய விமானமான யு-380 ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது, இரண்டாவது தடவையாகும் என்பதுடன் பகல் பொழுதில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணி, சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் தரையிறங்கிய போது அதில் 300 பயணிகள் இருந்துள்ளனர். குறித்த விமானம் டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த நிலையில் இவ்வாறு தரையிக்கப்பட்டது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு-
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி உயர் நீதிமன்றில் சேனக டி சில்வா மனு தாக்கல் செய்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கிய காரணத்தினால் பாராளுமன்ற உறுப்புரிமையை மீள வழங்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் இவ்வாறான மனுவொன்றை தாக்கல் செய்ய சேனக்க டி சில்வாவிற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
டி.வி.உபுல் பிணையில் விடுதலை-
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் மஹிந்த ஆட்சியில் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும் என டி.வி.உபுல் பகிரங்க மேடையில் கருத்து வெளியிட்டார். இதுபற்றி அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைத்திருந்தது.
புதிய விமானப்படை தளபதி நியமனம்-
எயார் வைஷ் மார்ஷல் ககன் புலஸ்தி புலத்சிங்ஹல புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புப் பணிகளின் பிரதம அதிகாரியாக எயார் மார்ஷல் கோலித்த குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.