கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி கைமாறப்பட்டது என்ற செய்தியில் உண்மை இல்லை-

mavaiதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி கைமாறப்பட்டது என்ற செய்தியில் உண்மை இல்லை. அந்த செய்திக்கு பதில் அளிக்கும் ஊடக அறிக்கை ஒன்றினையும் விரைவில் வெளியிடவுள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெற்குக்கு அழைக்கப்பட்டு பாரிய நிதி கைமாறப்பட்டதாக சில பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன 

அது உண்மைக்கு மாறான பொய்யான செய்தி என்பதனை நிரூபிக்க வேண்டியுள்ளது. அது தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

அதன் உண்மைத் தன்மை என்ன என்பது தொடர்பில் அறிய வேண்டும என நான் கேட்டுள்ளேன், அவரின் பதிலுக்கு பிறகு ஊடக வியலாளர் சந்திப்பு ஒன்றினை கூட்டி பத்திரிக்கையில் வந்த உண்மைக்கு மாறான செய்திக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதற்காக அறிக்கை ஒன்றினையும் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார்.

ஜனாதிபதியும் பிரதமரும் எம்மை ஏமாற்றி விட்டார்கள்  மாவை

ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எம்மை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள். அது தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற கூடும் வேளையில் அவர்களுடன் பேசி ஒரு முடிவை எட்ட உள்ளோம். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு தமிழ் மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வாக்கு அளித்த பின்னர் உடனடியாக அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம்

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அவற்றை அதன் உரிமையாளருக்கு வழங்க வேணும் அவர்கள் மீள்குடியேற்ற பட வேண்டும் என நாங்கள் பேசி தேர்தல் அறிக்கையில் நூறு நாள் திட்டத்தில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டு வாக்குறுதி தரப்பட்டது போல அந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வலி வடக்கில் விடுவித்து மீள் குடியேற்றம் செய்வோம் என ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி என எல்லோரும் வந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு அந்த காணி சான்றிதழ்கள் வழங்கும் போதும், எந்த மக்களிடம் இருந்து காணிகள் அபகரிக்கப்பட்டதோ அந்த காணிகளை அந்த மக்களிடமே மீள் கையளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்கள்.

வாக்குறுதி அளித்தபடி ஆரம்பத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கபப்டும் என அறிவித்து இருந்தார்கள் வளலாயில் மற்றும் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததில் ஒரு பகுதி நிலம் விடுவிக்கப்பட்டது.

வலி வடக்கில் 564 ஏக்கர் காணி தான் விடுவிக்கப்பட்டுள்ளது வளலாயில் ஒரு பகுதி 437 ஏக்கர் நிலம் விடுவிக்கபப்ட்டுள்ளது. வளலாயில் விடுவிக்கப்படும் என முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாக கூறிய நிலத்தையே தற்போதைய அரசாங்கம் விடுவித்தது. இன்னமும் 403 ஏக்கர் காணி விடுவிக்கபப்டவில்லை

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்தில் 564 ஏக்கர் நிலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஆறு மாத காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய மக்கள் அந்த காணிகளை துப்பரவு செய்யவோ வேறு உதவிகளை செய்வோ நிதி இல்லை என மீள் குடியேற்ற அரசு சொல்லி இருக்கின்றது
அதே போன்று சம்பூர் பிரதேசத்தில் 876 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியே வர்த்த மானியில் கையெழுத்து வைத்த பின்னரும் அஅங்கு மீள் குடியேற்றத்தை தாமப்படுத்த படுகின்றது

மீள் குடியேறிய மக்களையும் பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் தந்த வாக்குறுதிகளை தேர்தலில் வென்ற பின்னர் அவற்றை நிறைவேற்ற வில்லை.

அதேவேளை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம் பல இளைஞர்கள் 20 வருட காலத்திற்கு மேலாக எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுகின்றார்கள்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த மாதத்திலையே விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு வாக்குறுதி தந்து இருந்தார்கள் தற்போது ஆறுமாத காலமாகியும் இன்னமும் அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படவில்லை

பட்டதாரி மாணவர்கள் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் பலர் வடக்கு கிழக்கில் உழைப்பற்றவர்களாக இருக்கின்றார்கள் அவர்களும் வேலை வழங்க வேண்டும் என கோரி இருந்தோம்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவை தொடர்பில் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும் என இக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளோம்.

23 ஆவது திகதி பாராளுமன்றம் கூடும் வேளையில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி நிலங்கள் விடுவிக்கப்பட வேணும் மீள் குடியேறியவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் இத்தகைய அனைத்து விடயங்களையும் இந்த அரசாங்கத்துடன் பேசி ஒரு முடிவை எட்ட உள்ளோம். என மேலும் தெரிவித்தார்

அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு கொள்கை உருவாக்கப்படவுள்ளது: மாவை-

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், மலையாக கட்சிகளுக்கும், முஸ்லீம் மக்களுக்கும், சிறிய கட்சிகளும் முற்று முழுதாக திருப்தி படாத வகையில் 20 ஆவது சட்ட திருத்தம் வருவதை நாங்கள் பூரணமாக எதிர்க்க வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அது எத்தகைய வடிவத்தில் வர போகின்றது என்பது இன்னமும் உறுதிப்படுத்த படவில்லை அது தொகுதி அடிப்படையா அல்லது முன்னைய மாதிரி விகிதாசார அடிப்படையா என்று 20 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் கொண்டு வர இருக்கும் முன் வரைவுகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மலையாக கட்சிகளுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் குறிப்பாக சிறிய கட்சிகள் முற்று முழுதாக திருப்தி படாத வகையில் அந்த சட்ட திருத்தம் வருவதை நாங்கள் பூரணமாக எதிர்க்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் திட்ட வட்டமாக பேசவுள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் புரிந்துணர்வு கொள்கை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் கட்டமைப்பை உறுதிப்படுத்த புரிந்துணர்வு கொள்கை ஒன்றினை செய்து கொள்வது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம்.

தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் அது தொடர்பில் தமது கருத்துக்களை எழுத்து மூலம் தந்துள்ளார்கள் அந்த உடன்படிக்கை அடுத்த மாத கால பகுதியில் உறுதி செய்யப்படும்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடமும் கலந்தாலோசித்து சில திட்டவட்டமான முடிவுகளை எடுபதற்கும் தீர்மானித்துள்ளோம்.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கூட்டு கூட்டம்.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கூட்டு கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அது பல விடயங்கள் விபரமாக பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எல்லோரிடத்திலும் இணக்கத்தை ஏற்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அந்த கூட்டத்தில் பேச உள்ளோம். அது அவசியம் என்றும் கருதி உள்ளோம் என மேலும் தெரிவித்தார்