20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு-
புதிய தேர்தல் முறைமைக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது மேலதிக வர்த்தமானியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன் தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. புதிய திருத்தத்தின் ஊடாக விருப்பு வாக்கு முறைமை நீக்கப்படவுள்ளது. தொகுதி மற்றும் விகிதாசார முறைமைக்கு அமைய பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை, இந்தியா தரைவழி மார்க்கத்தால் இணைக்க விருப்பம்-
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23 ஆயிரம் கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29கிலோமீற்றர்) இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுவதாக கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த முனையும் அரசு-ஞானசார தேரர்-
புலம்பெயர் தமிழர்களின் சர்வதேச மா நாடு ஒன்றை கொழும்பில் நடத்த வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை பாராட்டும் அதேவேளை வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் எமது இராணுவ வீரர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக் கைகளை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை என பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்களை மட்டும் சந்தோஷப்படுத்துவதில் இந்த அரசு மும்முரமாக செயற்படுவதனை தவிர்த்து எமது பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிர் தியாகங்களின் அர்ப்பணிப்பினால் கிடைக்கப்பெற்ற தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிடக்கூடாது எனவும் சுட்டிகாட்டினார். கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா பௌத்த அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு அதன் தலைமை அலுவலகத்தில் நேற்றுஇடம் பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் கட்டாய திருமணப் பட்டியலில் இலங்கை-
பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களில் கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளின் முதல் 10 பட்டியலில் இலங்கை, ஆறாம் இடத்தை வகிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. குறித்த ஆய்வை மேற்கோள்காட்டி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை அடுத்து ஆறாம் இடத்தில் இலங்கை உள்ளதாகவும் காட்டாயத் திருமணமானது பிரித்தானியாவில் தண்டணைக்குரிய குற்றமெனவும் என்.டீ.டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாக்கிஸ்தான் 38.3 சதவீதத்துடன் முதலாமிடத்தையும் இந்தியா 7.8 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பங்களாதேஷ் 7.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும் சோமாலியா 1.6 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் இலங்கை 1.1 சதவீதத்துடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன. அத்துடன், துருக்கி 1.1 சதவீதத்துடன் ஏழாம் இடத்தையும் ஈரான் 1 சதவீதத்துடன் எட்டாமிடத்தையும் மற்றும் ஈராக் 0.7 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியை விமானப்படை தளபதி சந்தித்தார்-
விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையிலேயே விமானப்படை தளபதி, ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள, இலங்கையின் 15ஆவது விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்று கொண்டதை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்துள்ளார்.
சஜீன்வாஸின் விளக்கமறியல் நீடிப்பு, திஸ்ஸவிடம் விசாரணை-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அவரது வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதவான் இவரது பிணை கோரிய மனுவை நிராகரித்ததுடன், அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு சென்றுள்ளார். முற்பகல் 10மணியளவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பதிவு தபால் விநியோகத்தில் பாதிப்பு-
பதிவு தபால் விநியோக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதே இதற்கு காரணமாகும். பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கிக்னறனர். இது தொடர்பாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறுகையில், ஊழியர்கள் பற்றாக்குறையே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிக தபால் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பழைய முறையிலேயே நடைபெற வேண்டும்-நலின்-
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஊழல் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார். பொலிஸ் நிதி மோடிச விசாரணை பிரிவு பிரதமரின் பழிவாங்கும் இயந்திரம் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் விசாரணை முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 20வது திருத்தச் சட்டத்தை உடன் நிறைவேற்றி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் எதிர்வரும் தேர்தல் பழைய முறைபடியே நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 255ஆக உயர்த்த ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாதெனவும் நலின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
மொஹான் பீரிஸிற்கு எதிரான மனு வாபஸ்-
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள மனுதாரர் தீர்மானித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளதால் மனுதாரர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதாகவும் அவருக்கு எதிரான மனுவை ஜூலை 27ம் திகதி மீளப் பெற்றுக்கொள்வதாகவும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.