ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டி-

UNP (2)எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கட்சியின் ஊடக பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அத்துடன், இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின்போது மேலும் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சபையை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே கட்சியின் மத்திய குழு கூடுவது என்றும் இன்றைய மத்திய குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது என கட்சியின் ஊடக பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

சீனாவில் தங்கியிருப்பது குறைக்கப்படும்-வெளிவிவகார அமைச்சர்-

mangalaசீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டு கொள்கையை இலங்கை மதிப்பாய்வு செய்யவும் ஏனைய நாடுகளுடனான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று தெரிவித்தார். சீனா உட்பட சகல நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் சம நிலையான இராஜதந்திரக் கொள்கைகளை இலங்கை முன்னெடுக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, என்எச்கே வேல்ட் நியூஸ_க்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2009இல் இலங்கைக்கு உதவி வழங்குவதில் சீனா, ஜப்பானை முந்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்கத்தின் கீழ் ஊழல்கள் அதிகம் காணப்பட்டமைக்கு சீன உதவி வழிவகுத்தது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தை இலங்கை நிறுத்தி வைத்து, அதனை மதிப்பாய்வு செய்து வருகின்றது. இந்த செயற்றிட்டம் சரியான செயன்முறைகளை கடைப்படித்ததா என்பது கேள்விக்குறியாகும் என அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

metஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்ளுதல், பயிற்சிகளுக்காக இணைந்துகொள்ளும் பாதுகாப்பு பிரிவினரின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரித்துகொளடளல், கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளும் நடந்துகொள்ளும் முறைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உணவு விஷமானதால் 144 பேர் பாதிப்பு-

hospitalஉணவு விசமடைந்ததன் காரணமாக கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 144 ஊழியர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர். திடீர் சுகவீனமுற்றவர்களில் 61 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை உணவு உட்கொண்டதன் பின்னர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுகவீனமுற்றுள்ளனர். சுகவீனமுற்ற 144பேரும் இராகம, மினுவங்கொட சீதுவ வைத்தியசாலைகளில் அனுமதித்ததன் பின்னர் சிலர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளனர்.

காவற்துறை அதிகாரிகள் தரமுயர்வு-

policeபிரதி காவல்துறை அதிகாரிகள் இருவர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபராக உயர்வு பெற்றுள்ளனர். இதன்படி, தற்போது நிதி குற்ற விசாரணை பிரிவில் பணிப்புரியும் பிரதி காவல்துறை அதிகாரி ரவி வைத்தியலங்கார மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்தில் பணிபுரிந்த பிரதி காவல்துறை அதிகாரி டி.டபிள்யூ. செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்னர். இதற்கு இன்று அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருடன் இணைந்து பயணிக்கத் தயார்-மாவை-

mavaiவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதிராஜாவினால் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த தனக்கும் தெரியப்படுத்துமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார். அவருடன் இணைந்து நாங்கள் செயற்பட தயாராகவுள்ளோம்; நாங்கள் பொறுப்புள்ள இடத்தில் இருக்கின்றோம். முதலமைச்சர் கூறியதாக வந்த செய்தியில் உண்மைத் தன்மையை அறியவேண்டியதாக இருந்தது. நாங்கள் ஒன்றாக வேலை செய்யவேண்டும் என எண்ணத்துடன் இருக்கின்றோம். தேர்தல் வருங்காலங்களில் இத்தகைய செய்திகள் எங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் அரசியல் உள்ளேன். இதுவரையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்படவில்லை நாங்கள் ஒரு இணக்கத்தின் அடிப்படையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்படவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.