இன்று உலக அகதிகள் தினம்-

refugeesஉலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவு கூறப்பட்ட நிலையில், அதனையே சர்வதேச அகதிகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டின் உள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமுகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி உலக அகதிகள் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இலங்கை அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் உள்நாட்டிலும் போர், சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், இன்னமும்கூட பல முகாம்களில் வசித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புலிகளின் வலையமைப்பு தொடர்ந்து இயங்கி வருகின்றது-அமெரிக்கா-

Fபுலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான சர்வதேச தீவிரவாத அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டிருந்தது. இதில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகிறது. அவர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது இலங்கை பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. எனினும் புதிய அரசாங்கம் குறித்த சட்டத்தை தளர்த்துவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதேவேளை இந்தியாவிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜப்பானிய பிரதமர் சந்திப்பு-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவை ரோக்கியோவில் சந்தித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின் வெளிவிவகார அமைச்சர் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், மங்கள சமரவீர இவ் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவர் ரோக்கியோவில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றிலும் பங்கேற்கிறார். இதேவேளை, இலங்கைமீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தனித்துவமான விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், விரைவில் உள்நாட்டு பொறிமுறை அமுலாக்கப்படவுள்ளது. இந்த பொறிமுறைக்கு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். எனினும் இலங்கையின் தனித்துவமான நடைமுறைகளின் ஊடாக இந்த விசாரணைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் பயணித்த வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentபதுளை மாவட்டம் பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 01.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த 09 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஒன்று பயணித்த வாகனம் பசறை – புத்தளம் வீதியின் 14ம் கட்டைப் பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை-

wreereவெயாங்கொடையில் இருந்து பாணந்துறை வரையில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையானது ரயில்வே திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 160 ரயில் பெட்டிகளையும் 18 பவர் செட் ரயில்களையும் 30 டாங்கர்களையும் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது எனவும் அசர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் விடயம்-

ajith pereraஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது குறித்த உத்தியோக பேச்சுவார்த்தைகள் எவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையில் பாலம் மற்றும் கடலுக்கு அடியிலான சுரங்க வழிபாதை என்பவற்றை உள்ளடக்கி இந்த பாதை நிர்மாணிக்கப்படவிருப்பதாக, இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்திருந்தார். எனினும் இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தங்களுடன் உத்தியோபூர்வமாக எதனையும் பேசவில்லை. பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜோ இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போதும், இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது-

airportஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீண்டநாள் மீன்பிடிப் படகின் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த இருவரே நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 16 இலங்கையர்களில் இருவர் அங்கிருந்து நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிலாபம் மற்றும் உடப்பு பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

போலி விசாவுடன் யாழ். இளைஞர் கைது-

arrest (2)போலி விசாவைப் பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே போலி விசாவின் மூலம் கனடா செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த இளைஞர் ஜப்பான் ஊடாக கனடா செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான இளைஞரிமிருந்து நெதர்லாந்திற்குப் பயணமாவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த போலி விசா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.