Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-
tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா அவர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் கருத்துக் கூறினார்கள். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்தபோதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.  

காலிமுகத்திடலில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

yogaசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலி முகத்திடலில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்ளுர் சமுதாய யோகா மற்றும் ஆன்மீக அமைப்புக்களுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் காலை 6.30 முதல் 8.30 வரை நடைபெற்றன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் கடந்த 2014 டிசம்பர் 11ஆம் திகதி இந்தியாவால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இணை அநுசரணையாளரான இலங்கை உட்பட 170 நாடுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும்படியான இந்த அழைப்பு இந்தியப் பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடியினால், கடந்த செப்டம்பர் 27ஆம் திகதியன்று அவருடைய ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின்போது விடுக்கப்பட்டது. “யோகா உள்ளத்தையும் உடலையும் ஒன்றிணைக்கும் ஒரு உருவாக்கம் ஆகும்: அது சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்குமான ஒன்றிணைந்தவொரு அணுகு முறையாகும். இது தேகாப்பியாசம் பற்றியதல்ல ஆனால் ஒருவரிடமுள்ள தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகும் என நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை-

murderமன்னார் அடம்பன் முள்ளிக்கணடல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தந்தையர் தினம் மற்றும் உலக இசை தினம்-

fathers day......சர்வதேச தந்தையர் தினம் இன்று அனுஸ்ட்டிக்கப்படுகிறது. வருடாந்தம் ஜுன் மாதம் 3வது வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது. உலகின் 52 நாடுகளால் இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படும். 1910ம் ஆண்டு முதல் ஜுன் 19ம் திகதி முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் தலைவராக தந்தை ஒருவர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுக்காக, அவரை கௌரவிக்கும் வகையில் இன்றையதினம் கொண்டாடப்படுகிறது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் திகதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

பல கட்சி ஜனநாயகத்தை ஒழிக்கும் யோசனைக்கு உடன்பட மாட்டோம் – பிரதமர் உறுதி-

Ranilபல்வேறு கட்சிகள் இடம்பெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் எந்த ஒரு தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்துக்கும் தாம் உடன்பட போவதில்லை என, இன்று காலை நடத்தப்பட்ட கூட்டத்தில் பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட சிறு மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தன், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், அனுர குமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன், லால் காந்த ஆகியோரை அழைத்து அலரி மாளிகையில் பிரதமர் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது, பிரதமரிடம் நாம் அனைவரும் எமது சிறு மற்றும் சிறுபான்மை பேரவையின் ஒருமித்த கருத்தை முன் வைத்தோம். இப்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இது இந்த நாட்டிலே இன்று இருக்கின்ற பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு கட்சி அரசியலுக்கு வழி காட்டுகின்றது. இரட்டை வாக்குரிமை தொடர்பாகவும், உறுப்பினர் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. அதைவிட இந்த வர்த்தமானி யோசனைகளில் அடிப்படையில் பல கட்சி அரசியலை ஒழிக்கும் திட்டம் இருக்கின்றது. இந்த அபாயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. வண. சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய வர்த்தமானி பிரகடனத்தில் வெளியாகியுள்ள 20ம் திருத்த யோசனைகளுக்கு எதிராக, பாராளுமன்றத்துக்கு வெளியில் நாம் நடத்தும் போராட்டத்தில் பங்கு வகிக்கவும் அவர் உடன்பட்டுள்ளார். எமது கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் யோசனைகளை ஐதேக ஏற்காது என்றும், இதை பாராளுமன்றத்தில் இந்த யோசனைகள் கொண்டு வரப்படும் போது தெரிவிக்க போவதாகவும், எதிர்க்க போவதாகவும் கூறினார். உடன்பாடுகள் எட்ட முடியாவிட்டால் உடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து முக்கியமான பிரச்சினைகள் திசை திருப்பப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில், புதிய யோசனைகள் தமது கட்சிக்கு பாரிய கெடுதல்களை செய்யப்போவதாக தோன்றவில்லை என்றாலும் நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிறு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் தமக்கு கடப்பாடு இருப்பதை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பிரதமருக்கு தெரியப்படுத்தினார். அத்துடன் வடக்கில் தேர்தல் தொகுதிகளை குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் தாம் ஏற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.