காலிமுகத்திடலில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்–
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலி முகத்திடலில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்ளுர் சமுதாய யோகா மற்றும் ஆன்மீக அமைப்புக்களுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் காலை 6.30 முதல் 8.30 வரை நடைபெற்றன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் கடந்த 2014 டிசம்பர் 11ஆம் திகதி இந்தியாவால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இணை அநுசரணையாளரான இலங்கை உட்பட 170 நாடுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும்படியான இந்த அழைப்பு இந்தியப் பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடியினால், கடந்த செப்டம்பர் 27ஆம் திகதியன்று அவருடைய ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின்போது விடுக்கப்பட்டது. “யோகா உள்ளத்தையும் உடலையும் ஒன்றிணைக்கும் ஒரு உருவாக்கம் ஆகும்: அது சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்குமான ஒன்றிணைந்தவொரு அணுகு முறையாகும். இது தேகாப்பியாசம் பற்றியதல்ல ஆனால் ஒருவரிடமுள்ள தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகும் என நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை-
மன்னார் அடம்பன் முள்ளிக்கணடல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தந்தையர் தினம் மற்றும் உலக இசை தினம்-
சர்வதேச தந்தையர் தினம் இன்று அனுஸ்ட்டிக்கப்படுகிறது. வருடாந்தம் ஜுன் மாதம் 3வது வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது. உலகின் 52 நாடுகளால் இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படும். 1910ம் ஆண்டு முதல் ஜுன் 19ம் திகதி முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் தலைவராக தந்தை ஒருவர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுக்காக, அவரை கௌரவிக்கும் வகையில் இன்றையதினம் கொண்டாடப்படுகிறது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் திகதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.