Posted by plotenewseditor on 21 June 2015
Posted in செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா அவர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் கருத்துக் கூறினார்கள். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்தபோதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.