பல கட்சி ஜனநாயகத்தை ஒழிக்கும் யோசனைக்கு உடன்பட மாட்டோம் – பிரதமர் உறுதி-

Ranilபல்வேறு கட்சிகள் இடம்பெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் எந்த ஒரு தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்துக்கும் தாம் உடன்பட போவதில்லை என, இன்று காலை நடத்தப்பட்ட கூட்டத்தில் பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட சிறு மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தன், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், அனுர குமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன், லால் காந்த ஆகியோரை அழைத்து அலரி மாளிகையில் பிரதமர் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது, பிரதமரிடம் நாம் அனைவரும் எமது சிறு மற்றும் சிறுபான்மை பேரவையின் ஒருமித்த கருத்தை முன் வைத்தோம். இப்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இது இந்த நாட்டிலே இன்று இருக்கின்ற பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு கட்சி அரசியலுக்கு வழி காட்டுகின்றது. இரட்டை வாக்குரிமை தொடர்பாகவும், உறுப்பினர் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. அதைவிட இந்த வர்த்தமானி யோசனைகளில் அடிப்படையில் பல கட்சி அரசியலை ஒழிக்கும் திட்டம் இருக்கின்றது. இந்த அபாயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. வண. சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய வர்த்தமானி பிரகடனத்தில் வெளியாகியுள்ள 20ம் திருத்த யோசனைகளுக்கு எதிராக, பாராளுமன்றத்துக்கு வெளியில் நாம் நடத்தும் போராட்டத்தில் பங்கு வகிக்கவும் அவர் உடன்பட்டுள்ளார். எமது கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் யோசனைகளை ஐதேக ஏற்காது என்றும், இதை பாராளுமன்றத்தில் இந்த யோசனைகள் கொண்டு வரப்படும் போது தெரிவிக்க போவதாகவும், எதிர்க்க போவதாகவும் கூறினார். உடன்பாடுகள் எட்ட முடியாவிட்டால் உடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து முக்கியமான பிரச்சினைகள் திசை திருப்பப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில், புதிய யோசனைகள் தமது கட்சிக்கு பாரிய கெடுதல்களை செய்யப்போவதாக தோன்றவில்லை என்றாலும் நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிறு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் தமக்கு கடப்பாடு இருப்பதை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பிரதமருக்கு தெரியப்படுத்தினார். அத்துடன் வடக்கில் தேர்தல் தொகுதிகளை குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் தாம் ஏற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.