ஆப்கான் நாடாளுமன்ற தாக்குதல் அறுவர் உயிரிழப்பு-

455ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தினுள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த சில மணி நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அவைக்குள்ளும், வளாகத்திலும் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், பொதுமக்கள் 31பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் காபுல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கீழவை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு முதல் குண்டுவெடிப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதால் உறுப்பினர்கள் பதற்றமடைந்தனர். நாடாளுமன்றத்தில் செய்தி சேகரித்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் இதனை நேரலையில் ஒளிபரப்பியது. அவைக்குள்ளே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்தின் வெளியேவும் கார் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திலிருந்து அதிக அளவில் புகை வெளியேறியுள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற வளாகத்தில் இருந்து எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.