ஆப்கான் பாராளுமன்ற தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்-
ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், இத்தாக்குதலானது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலாகும் என கூறியுள்ளார். பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் குடியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை இல்லாதொழிப்பது குறித்து அனைவரது பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு என்ற வகையில் ஆப்கான் பாராளுமன்றத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது மிகவும் வெறுக்கத்தக்கதொரு பயங்கரவாதச் செயலாகும். இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் குடியுரிமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளாகும். அத்துடன் இவர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணுவத்தினர் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் பின்வாங்க கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக போராடி இன்று அதனை வெற்றிகரமாக முற்றாக ஒழித்துவிட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இன்று நிம்மதியுடன் வாழ்கின்றோம். அவ்வகையில் பயங்கரவாதத்தின் வடுக்கள் வேதனைகள் என்ன என்பது பற்றி தெளிவாக அறிந்த நாடு என்ற வகையில், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் என ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் விழாவுக்கு நிதி வழங்கவில்லை-யூஎன்எச்ஆர்சீ-
வெளிவிவகார அமைச்சினால் இவ்வருட இறுதியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக வந்த செய்தியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிராகரித்துள்ளது. இது முழுப்பொய் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ருப்பர் கொல்வின் கூறினார். புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்த இடங்கொடுக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்ததுடன் இந்த நிகழ்வுக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ண சிங்க, கடந்த 21ஆம்திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த விழாவுக்கு நிதி வழங்குவதன் பின்னாலுள்ள காரணம் பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இலங்கை புலம்பெயர்ந்தோர் சமுதாயம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு செய்ய ஓர் உத்தியோகபூர்வ ஏற்பாட்டை உருவாக்குவதற்காக இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
வவுனியா அரச அதிபரை இடம் மாற்றக்கோரி போராட்டம்-
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையிலையே மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தினுள் எவரும் உட்செல்ல விடாது மண்டப வாயிலில் அமர்ந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர். வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து கடந்த அமர்வின் போதும் உறுப்பினர்கள் சபை அமர்வை ஆரம்பிக்க விடாது சபை நடுவில் கூடி போராட்டம் நடாத்தினார்கள். அதன் போது அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், அரச அதிபர் இடமாற்றம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாhராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமருடன் கலந்துரையாட உள்ளதாகவும், விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் எனவும் உறுதி அளித்ததால் அன்றையதினம் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் இன்னமும் அரச அதிபர் இடமாற்றம் செய்யப்படவில்லை என கூறியே இன்றைய தினம் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்-
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவை அவசியம் கருதி பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மீரிகம பொலிஸ் பொறுப்பதிகாரி, மோசடி விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி, ரம்புக்கன பொலிஸ் பொறுப்பதிகாரி, தந்திரிமலை பொலிஸ் பொறுப்பதிகாரி, நுகேகொட வலய பொறுப்பதிகாரி, தலவாக்கலை பொலிஸ் பொறுப்பதிகாரி, முல்லியாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு தெற்கு வலய பொறுப்பதிகாரி, தம்பகல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி, இரத்தினபுரி வலய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேன் திருடப்பட்டமை தொடர்பில் மூவர் கைது-
வேன் ஒன்றை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் குடாஓய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனறாகலை மாவட்டம் புத்தல உனாவட்டுன்ன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை கொள்ளையடித்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெல்லவாய மற்றும் பெல்வத்த பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.
சமிக்ஞையை மீறிச் சென்ற லொறிமீது சூடு, ஒருவர் உயிரிழப்பு-
பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த லொறிமீது அரந்தலாவ பொலிஸ் சோதனைச் சாவடி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 2.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லொறியில் மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மங்களகம பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தியுள்ளனர். லொறி நிறுத்தாது பயணித்ததால் அரந்தலாவ பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அறிவித்துள்ளனர். அரந்தலாவ பொலிஸார் லொறியை நிறுத்தி போதும் லொறி நிறுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்போது ஒருவர் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். லொறியில் பயணித்த ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் லொறியை மீட்கும்போது அதில் மாடுகள் இருக்கவில்லை என கூறப்படுகிறது.
உருத்திரபுரத்தில் 3வயது சிறுமியை காணவில்லை-
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் 3 வயதான சிறுமியொருவர் நேற்று முன்தினம் தொடக்கம் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி வசித்த வந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதும் அவர் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காணாமல் போனமை தொடர்பாக பெற்றோர் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிறுமியை நாட்டில் இருந்து வேறெங்கும் கடத்திச் செல்லும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதைத் தடுக்க விமானநிலைய அதிகாரிகளுக்கும் சிறுமியின் படங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறுமி தாயாருடன் சென்றிருந்த வேளையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு நாணயம் கடத்த முயன்றவர் கைது-
சென்னை நோக்கி ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தை கொண்டு செல்ல முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 28,000 யூரோ, 4000 பவுன் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் இலங்கை பெறுமதி 51 லட்சத்து 88,267 ரூபா என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
தனுனவின் கோரிக்கை மனு நிராகரிப்பு-
தடைசெய்யப்பட்டுள்ள தன்னுடைய கடவுச்சீட்டு தடையை நீக்குமாறும் அரசுடமையாக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீண்டும் வழங்குமாறும் கோரி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் கோரிக்கை மனுவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா நிராகரித்துள்ளார். தனுன திலகரத்ன, ஐந்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தவர் என்பதனால் இந்த கோரிக்கை மனுவை இப்போதைக்கு ஆராய்ந்து பார்க்கமுடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்க கோரிக்கை-
ஆயுத களஞ்சியசாலையை கொண்டு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்ப்பு இருக்குமாயின் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி அதனை முன்வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.எஸ் மொரயாஸ். சட்டமா அதிபருக்கு கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை-
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிடம் இன்று கையளித்துள்ளதாக சட்டத்தரணி அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரல பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர். விசேட விசாரணை குழுவொன்றை நிறுவி, அந்த வேலைவாய்ப்பு பணியகத்தில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பணித்திருந்தது.
உயர்தர வணிகத்துறை மணவர்கட்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு-
கா.பொ.த உயர்தர வணிகத்துறை மணவர்கட்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சட்டத்தரனி வே.தேவசேனாதிபதி அவர்களின் முழுமையான அனுசரனையுடன் முல்லைத்தீவு மாவட்ட உதவிக்கல்விப்பணிப்பளர் ததலைமையில் கடந்த 13.06.2015 அன்றுகாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. க.குருகுலராஜா, பாரளுமன்ற உறுப்பினர். கௌரவ. ஈ.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் வட மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.க.இராஜேந்திரம். தற்போதய மேலதிக மாகாணப் பணிப்பளர் ச.கைலைநாதன், கொழும்பு ரோயல் கல்லுரியின் பிரபல விரிவுரையாளர்களான எஸ்.கலாகரன், வி.சோதிலிங்கம் மற்றும் முழுமையான அனுசரனையாளராகிய சட்டத்தரனி வே.தேவசேனாதிபதி அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
முன்னதாக இவ் நிகழ்வில் மங்கள வாத்தியம் சகிதம் விருந்தினர்கள் மேடைக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வின் மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், அவர்கள் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. க.குருகுலராஜா, முன்னாள் வட மாகாண கல்விhப் பணிப்பாளர் திரு.க.இராஜேந்திரம். ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
தொடர்ந்து வலி மேற்கு பிரசே சபைத் தவிசாளர் உரையாற்றுகையில் சட்டத்தரணி தேவ சேனாதிபதி அவர்கள் 2012ம் ஆண்டு முதலாக குறித்த இலவச கருத்தரங்கினை கபொத சாதாரண தர மாணவர்கட்கு நடாத்தி அதன் வாயிலாக மணவர்கள் பெரும் நன்மை அடைவதற்கு வழிவகுத்து வருகின்றார். ஒவ்வொரு மாணவர்கட்கும் பெறுமதி கூடிய கடந்த கால வினாத்தாள்களை சகல பாடங்களும் உள்ளடக்கியதாக விடைகளுடன் கூடியதாக வழங்கி அதன் வாயிலாக மாணவர்கள் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளத்தக்க சூழலை உருவாக்கியுள்ளார்.
மிக நீண்ட ஒர் யுத்தத்தின் பினனரான நிலையில் எமது மக்கள் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்ற இவ் வேளையில் சட்டத்தரனி அவாகளால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் மகோன்னதமான பணி பாராட்டக் கூடிய ஒன்றாகும். இவ் நிலையில் தன்னலமற்ற இவ் பெரியாரின் சேவை எமது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதேவேளை கல்வி தொடாடபில் இன்றைய எமது பெற்றோர் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளும் மிகப்பாரிய தாக்கத்தினை கல்விச் சூழல்மீது ஏற்படுத்துகின்றது. இவ் நிலையில் எமது மதிப்புக்குரிய சட்டத்தரனி அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சேவை காலத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இதேவேளை இவ் ஆண்டு உயர்தர மாணவர்கட்கும் சிறந்த வளவாளர்கள் உதவியுடன் மேற்கொள்ளும் இவ் கருத்தரங்கும் எமது மாணவர்கட்கு மிக உதவியாக அமையும் என்றே கருதுகின்றேன். இவ் வகையில் தனனலமற்ற இவ் பண்பாளரின் சேவையினை போற்றுகின்றேன். இதற்கும் மேலாக இவ் சட்டத்தரணி எமது கிராமத்தவர் உறவினர் என்று கூறுவதில் பெருமை அடைகின்றேன் என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரனி தேவசேனாதிபதி அவர்கட்கும் வளவாளர்கட்கும் பாராட்டுச் சான்றுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கள் சட்டத்தரனி தேவசேனாதிபதி, கல்வி அமைச்சர், இளைப்பாறிய மாகாணக் கல்விப்பணிப்பாளர், வளவாளர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரை சட்டத்தரனி தேவசேனாதிபதி அவர்கள் கௌரவித்தார். தொடர்ந்து மாணவர்கடகு இலவச பாடநூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்படி நிகழ்வின் கொடையாளரான சட்டத்தரனி தேவசேனாதிபதி அவர்களை கௌரவித்தர். தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்கள் கௌரவித்தார். இவ் நிகழ்வில் 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன் பெற்றுக் கொண்டனர்.