மகிந்த போட்டியிட்டால் படுதொல்வி-எஸ்.பி திசாநாயக்க-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி படுதோல்வி அடையும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் விசேடமாக சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சியின் வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு அவசியம். கட்சியை பிளவடையச் செய்வதில்லை என முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள இரட்டை வாக்குச்சீட்டு முறை பொருத்தமானதாக அமையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பதை விட அமைச்சர்கள் எண்ணிக்கை குறைவதையே மக்கள் விரும்புகின்றனர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவது உகந்தது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
பசிலின் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி-
தாங்கள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோத செயல் என அறிவிக்கும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நபர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதம நீதியரசர் கே.சிறீபவன், பிரியசாத் டெப் மற்றும் ரோகினி மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழு இந்த அனுமதியை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு நாட்டின் சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் உரிமை மீறல் இடம்பெறாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதிகள் மனுவை மேலும் விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளனர். மனு தொடர்பில் எதிர்ப்பு இருப்பின் இன்றிலிருந்து இரு மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு விசாரணை ஒக்டோபர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.
பிரகீத் காணாமல் போனதன் பின்னணியில் 22 தொலைபேசிகள்-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் 22 தொலைபேசிகள் குறித்து தகவல்களை பெற்றுள்ளனர். குறித்த தொலைபேசிகளுக்குச் சென்ற அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர். 22 தொலைபேசிகளில் பல சிம் காட்கள் இட்டு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த 22 தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டுவந்தது யார் என்பது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சுங்கப் பிரிவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள் குறித்து தகவல் வழங்குமாறு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு அறிக்கையும் கிடைக்கப் பெற்றவுடன் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி வழக்கில் சிக்கியுள்ள சாலியவுக்கு பிணை-
சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கவென ஏற்படுத்தப்பட்ட ராடா நிறுவனத்தின் முன்னாள் பிரதான இயக்குநர் சாலிய விக்ரமசூரிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 16.9 கோடி ரூபா நிதி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். இதன்போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ம் திகதி சாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ராடா நிறுவனத்தின் முன்னாள் கணக்காய்வாளர் ஜயந்த சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையக விசேட விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின் நேற்றுமாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறையில் தகுதிக்கு இடமில்லை-சோபிதர்-
தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முறையில் தகுதியான நபர்கள் பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் இல்லாது போவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், 20ம் திருத்தத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சி-
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் முதலாவது அரசியல் பேராளர் மாநாடு, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முதலாவது அமர்வானது பொதுமக்கள் முன்னிலையிலும் இரண்டாவது அமர்வு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து. கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவதுடன் கட்சியின் பெயரை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இடம்பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு கொள்கையைத் தயாரிக்க தீர்மானம்-
சிறுவர் பாதுகாப்பு கொள்கையொன்றை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
20ஆவது திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகம்-பொன்சேகா-
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாக காணப்படுவதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெக்கிராவயில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி பெரிய கட்சிகள் தமது பலத்தை நிலை நாட்டிக் கொண்டு மக்களை நட்டாற்றில் விடும் நிலையே இந்த 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தினால் உண்டாகும் எனவும், எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் 25 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
கடந்த அரசின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தோல்வி-மங்கள-
பயங்கரவாதம் மீள தலைதூக்குவதை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு, அமெரிக்க ராஜாங்க செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் இலங்கையினுள் போர் அடிப்படையில் தோற்கடிக்கபட்டாலும் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையானது புதிய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் புதிய அரசாங்கமே புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பாவில் அமுல்ப்படுத்த காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10மணிக்கு இடம்பெற்றுள்ளது. பரந்தனைச் சேர்ந்த துரைராசா சித்திராதேவி ( வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார். விசுவமடுவில் இருந்து வவுனியாவிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அரச பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. அந்த வேளை கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த குறித்த பெண்ணை தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளிலில் வந்துகொண்டிருந்த பெண் ஸ்தலத்திலேயே தலைசிதறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனியார் பேருந்து சாரதியை கிளிநொச்சிப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாகன விபத்தில் ஆசிரியர்கள் ஐவர் காயம்-
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக களுவாஞ்சிக்குடியிலிருந்து திருகோணமலைக்கு, மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வேன் மரமொன்றுடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.பிக்களின் எண்ணிக்கை ஒன்பதாகவே இருக்க வேண்டும்-இரா.சம்பந்தன்-
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 வருடங்களுக்கு ஒன்பதை விட குறையக்கூடாது. அதனை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாயபூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலும் இது அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சு-
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரச தரப்பினருடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு கொழும்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்;தில் இராணுவத்தாலும் கடற்படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் செய்யவேண்டிய பரவிப்பாஞ்சான், மருதநகர், முகமாலை, இரணைதீவு கிராமங்களை இராணுவத்திடமிருந்து விடுவித்து காணி உரிமையாளர்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. முகமாலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாகவும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவின் உழவனூர், தம்பிராசபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி போன்ற காணி அனுமதிப்பத்திரம் இல்லாத மத்திய வகுப்பு திட்ட காணி உரிமையாளர்களுக்கு தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை எட்டப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று, மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி 1 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட் செயலக்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம், மன்னார் குஞ்சுக்குளம், திருக்கோணமலையின் சம்பூர், முல்லைத்தீவின் கோப்பாப்பிளவு ஆகிய கிராமங்களின் மீள்குடியேற்றத் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.