உள்ளுராட்சி தேர்தல் ஒரேதினம் நடத்தப்படும்-அமைச்சர் கரு

karu jeyasuriyaமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களை ஒரே நாளில் எதிர்காலத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான எல்லைகளை நிர்ணயிக்கும் தேசிய குழுவின் இறுதி அறிக் கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை அடிக்கடி நடத்துவது இயலாது. அடுத்துவரும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் தொகுதிகள் முறைமையின் கீழ் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் நாடு முழுவதிலும் ஒரே தினத்தில் நடத்தப்படும். இரு தேர்தல்களையும் ஒரேதினத்தில் நடத்தி முடிப்பது குறித்தும் அரசின் விசேட கவனம் திரும்பியுள்ளது. ஏற்கனவே 234 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் முடிவுற்றுள்ளதோடு மேலும் 88 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதியுடன் முடிவுறவுள்ளது. அதேவேளை தேசிய எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கைக்கு அமைய இனிமேல் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக தெரிவாகும் உறுப்பினர்களின் தொகை 4 ஆயிரத்து 486இல் இருந்து 5 ஆயிரத்து 081 வரையில் 595 உறுப்பினர்களால் அதிகரிக்கக்கூடும்.

அதன் பிரகாரம் அடுத்து வரும் முதலாவது உள்ளூராட்சி சபைத்தேர்தல் புதியதொகுதிவாரி முறைமையின் மீது புதிய அரசின் உள்ளூராட்சி அமைச்சரினால் நடத்தப்படக்கூடும். அத்துடன் முதல்தடவையாக இரு உறுப்பினர்கள் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பல உறுப்பினர்கள் தொகுதி முறைமையயான்று இப்புதிய முறைமையினூடாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், எல்லை நிர்ணயக்குழுவின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டபோது மாவட்டச் செயலாளர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த 122 யோசனைகளில் 53 யோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்ததாகவும் எல்லைகளை நிர்ணயம் செய்யும் செயற்பாடுகளின்போது நில அளவை திணைக்களத்திடமிருந்து மிகப்பெருத்த ஒத்துழைப்பு கிட்டி யிருந்ததாகவும் குழுவின் தலைவர் ஜயலத்திஸநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 9 மாகாணங்கள் தொடர்பாக புதிய தொகுதிகள் சம்பந்தப்பட்ட 9 வரைபடங்களும் 9வர்த்தமானி அறிவித்தல்களும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.