இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம்-

abdul kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். இலங்கையில் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் அப்துல் கலாம், எதிர்வரும் 27 ஆம் திகதி இந்திய திரும்பவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னே தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால தலைவர்கள் என்ற தலைப்பில் நாளை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அப்துல் கலாம், ஆயிரத்து 500 மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மிருசுவில் படுகொலை தொடர்பில் படைவீரருக்கு மரணதண்டனை-

colombo magistrate courtயாழ். மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு 8 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் படைவீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மிருசுவில் பகுதியில் இரு சிறுவர்கள் உட்பட 8பேர் கொடுரமான முறையில் கொல்லப்பட்டமை தொடர்பாக குறித்த காலப்பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய 5 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழங்கப்பட்டது. அதன்போது சுனில் ரத்தநாயக்க என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்படாமையால் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாண முதலமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்-

vigneswaranவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்றும் அந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்கினேஸ்வரன் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க விஜயம் இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீளக்குடியமர்ந்தோருக்கான நிதி அனுப்பி வைப்பு-

resettlementயாழ்ப்பாணம். வலி வடக்கு மற்றும் வலி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளில் மீளக்குடியமர்ந்த 1087 குடும்பங்களுக்கான மீளக்குடியமர்வுக் கொடுப்பனவுகள் குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு கொடுப்பனவாக 5000 ரூபாவும் மீளக்குடியமர்ந்த கொடுப்பனவாக 5000 ரூபாவும் பற்றைகளை துப்புரவு செய்வதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக 3000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 13ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அத்துடன் மீளக்குடியமர்ந்த மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்வதற்காக பரப்புக்கு 1871ரூபா. 23சதம் வீதம் எத்தனை பரப்பு காணி துப்பரவு செய்யப்படுகிறதோ அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படுவற்குரிய நிதியும் குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இரு கொடுப்பனவுகளும் மீளக்குடியமர்வதற்காக பதிவு செய்த அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட மீளக்குடியேற்றக் கொடுப்பனவாக 25ஆயிரம் ரூபா மீளக்குடியமர்ந்த பின்னர் வழங்குவதற்கு ஏதுவாக குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் மீளக்குடியமர்ந்த பின்னர் உணவுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு ஒருவருக்கு 150ரூபா விதம் மூன்று நாட்களுக்கான கொடுப்பனவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுத்த வீ.ஆனந்தசங்கரி-

sangariகிளிநொச்சி, பளை பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு சங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் சங்கரி அவர்கள் கருத்து கூறுகையில், தேசியக் கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார். பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில் இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேசசபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை மோதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு-

welikada.....2012 நவம்பர் 12ம் திகதி வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெலிக்கடை மோதல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் உள்ளிட்ட குழு தமது விசாரணை அறிக்கையை பிரதமரிடன் அண்மையில் கையளித்தது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் அமைப்பக்கடும் விசேட குழு விசாரணை நடத்த வேண்டும் என குறித்த குழு பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையிலுள்ள தகவல்படி பொலிஸ் அதிகாரிகள் சிலர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணைக்குழு கூறியுள்ளது. நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் வசதி குறைப்பாடு, ஆளணி குறைப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. விசாரணை குழுவின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு-

police ...வடமாகாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைந்து கொள்வதற்கு ஆயிரத்து 291 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 946பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேர்வு ஜீலைமாதம் 11, 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இடம்பெறவுள்ளன. வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் பணியாற்றுவதற்குத் தமிழ் பொலிஸாருக்குப் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பொலிஸாருக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டன. தமிழ் இளைஞர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து யாழ்.மாவட்டத்தில் இருந்து 573 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 454 விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்றன. கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 265 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 112 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. வவுனியா மாவட்டத்திலிருந்து 212 விண்ணப்பங்கள் கிடைத்தன.152 விண்ணப்பங்கள் தகுதிபெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 116 விண்ணப்பங்கள் கிடைத்தன. 93 விண்ணப்பங்கள் தகுதிபெற்றன. மன்னார் மாவட்டத்திலிருந்து 175 விண்ணப்பங்கள் கிடைத்தன. அவற்றிலில் 135 தகுதி வாய்ந்தன என பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது. தகுதிபெற்ற விண்ணப்பங்களுக்கு உரியவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜீலை மாதத்தில் இருநாட்கள் நடைபெறவுள்ளன. யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான முதலாவது நேர்முகத் தேர்வு யாழ்.மத்திய கல்லூரியில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7மணி தொடக்கம் இடம்பெறும். வவுனியா முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான முதலாவது தேர்வு வவுனியா காமினி வித்தியாலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7மணி தொடக்கம் இடம்பெறும். விண்ணப்பதாரிகளுக்குரிய நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதங்கள் பொலிஸ் ஆட்சேர்ப்பு பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் உள்ளுர் பொலிஸார் மூலமாக விரைவில் உரியவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.