சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும்-

67676யாழ். வலி தெற்கு பிரதேசசபையின் சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும் 22.06.2015 திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு வலிதெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வலிதெற்கு பிரதேசசபையின் ஓய்வு நிலை செயலாளர் திருமதி சரஸ்வதி சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சுன்னாகம் நூலகத்தின் வரலாற்றினை தாங்கிய பொன்விழா மலர் வெளியீடும் இடம்பெற்றது. வெளியீட்டுரையினை ஓய்வு நிலை சுன்னாகம் பொது நூலக நூலகர் க.சௌந்தரராஜ ஐயர் நிகழ்த்தினார். நூலினை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வெளியிட்டு வைக்க சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர் சி.குமாரவேல் பெற்றுக்கொண்டார். அத்துடன் நூலகத்தில் பணியாற்றியவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

யுத்தத்தின் அழிவுகளை சந்தித்தமையால் எமது சமூகம் பொருளாதரம், கல்வியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. கல்வி, விவசாயம் போன்ற துறைகளி; நாம் சிறந்து விளங்கினோம். வலி தெற்கு பிரதேச சபையின்கீழ் வரும் சுன்னாகம் மருதனார்மடம் சந்தை என்பன இலங்கையின் சிறந்த சந்தைகளாக விளங்கியிருந்தன. வலி தெற்கு பிரதேசம் பல கல்வியாளர்களையும், விவசாயிகளையும், புத்திஜீவிகளையும் உருவாக்கிய மண்ணாக விளங்குகின்றது. 

ஆரம்பத்தில் சுன்னாகம் பட்டிணசபை கட்சி பேதமின்றி சேவையாற்றியது. அக்காலத்தில் அரசியல் நாகரிகம் காணப்பட்டது. இவ்வாறான அரசியல் நாகரிகமான செயற்பாடுகள் மீளவும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனூடாகவே சிறந்த அபிவிருத்தியை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் எமது சமூகம் முன்னேற்றமடையும். துற்போது எமது சமூகத்தில் சமூகச்சீர்கேடு பெரிதாகக் காணப்படுகின்றன. சமூகச் சீர்கேட்டில் மிக்குறைவான தொகையினரே ஈடுபடுகின்றார்கள். இவர்கள் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியிலும் தொழிலிலும் உயர்ந்த நிலையில் எமது சமூகம் சிறந்த சமூகமாக வாழ்ந்து வந்திருக்கின்றது. கல்வியானது பாடசாலையில் மட்டும் தங்கியிருப்பதல்ல. சமூகத்தில் பாடசாலை நூலகம் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றது. கிராமத்தின் வளர்ச்சியின் அடிநாதமாக பிரதேசசபைகள் விளங்குகின்றன. அடிமட்ட மக்களுடைய பிரச்சினையை தீர்க்கக்கூடிய அதிகாரம் பிரதேசசபைக்கு உண்டு. வலி. தேற்கு பிரதேசசபையை ஏனைய பிரதேசசபைகளுக்கு முன்னுதாரணமாக செயற்படுவதுடன் மக்கள் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்றார்.