தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு-
யாழ். தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு நாளையும் (27.06.2015) நாளை மறுதினமும் (28.06.2015) ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெறவுள்ளது. இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வின் முதலாம் நாள் அமர்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் திரு அ.நடராஜன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தாசபை தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அ.சண்முகதாஸ், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் திரு. ஆறு திருமுருகன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சிறீமோகன், வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.சோ.சுகிர்தன், தெல்லிப்பளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திரு. கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். நாளை 27.06.2015 சனிக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகும் இந்நிகழ்வுகளில் நாட்டியாஞ்சலி, சிவதாண்டவம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
யாழ். நீதிமன்ற தாக்குதல், 14 பேர் பிணையில் விடுதலை-
யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களில் 14பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்தமைக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 பேர் இன்று நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 14 பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நன்னடத்தை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார். அத்துடன் எஞ்சிய 39 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா மீதான வன்கொடுமை படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி 135பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் சிலர் கட்டம் கட்டமாக நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால இந்திய முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இடையே இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அலுவலகத்திலே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இன்று காலை ஆரம்பமாக சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியருக்கு விளக்கமறியல்-
யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமிகள் மூவரும், சிறுவர்கள் இருவருமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த ஆசிரியரைக் கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். அதன்போது குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டுபாய் பயணித்த விமானம் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்-
இயந்திர கோளாறு காரணமாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ_380 ரக பயணிகள் விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கிப் பறந்த விமானமொன்றே இலங்கையில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் பயணிகள் 510 பேர் இருந்ததாகவும் விமான நிலைய கடமைநேர முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வு-
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்குரிய கடமைகளை தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெறுவது தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை ஓய்வூதிய சம்பள திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கையளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி தனித்து போட்டி, கரு போட்டியிட மாட்டார்-
எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கவென இந்நிகழ்வு இடம்பெற்றது. 10 அமைப்பாளர்கள் இதன்போது தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாகவும் அறிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற முயன்ற 78பேர் கைது-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றுகொண்டிருந்த 78 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்லும் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிரின்த கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை காலிதுறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை கஜமுகன் முன்பள்ளியின் விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)
யாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மேலாண்மையுடனும் வழிகாட்டலுடனும் நடைபெற்றுவரும் கஜமுகன் முன்பள்ளியின் விளையாட்டு விழா வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது.
முன்பள்ளிக் கல்வி என்பது ஒவ்வோர் மாணவரின் கல்வியிலும் முக்கியம் பெறுகின்றது. இவ் கல்வியின் ஊடாகவே மணவர்கள் கல்வியில் விரும்பமும் ஆர்வமும் ஏற்பட ஆரம்பிக்கின்றது. இவ் கல்வி உரிய முறையில் வழங்கப்படுவது மிக முக்கியமான ஒன்றாகும் இவ் கல்வி முறையில் எமது பிரதேசத்தில் வளங்கள் காணப்பட்ட போதும் சில வசதியீனங்கள் கணப்படவே செய்கின்றது. சில இடங்களில் பொளதீக வளப்பற்றாக்குறை கண்டறியப்பட்டுள்ளது. இவ் விடயங்களில் சமூகத்தின் ஒத்துளைப்பும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.
வெறுமனே அரச உதவிகளை மட்டும் நம்பியிருப்பதில் பயனில்லை. சமூகத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று அதனூடாக முன்பள்ளிகளை வளர்;ச்சி அடைய செய்வது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ் வகையில் இவ் கஜமுகன் முன்பள்ளிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் பல வழிகளிலும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். ஒவ்வோர் சமூக மட்ட அமைப்புக்களும் தாம் தங்கி வாழும் சமூகம் மட்டும் பயனடைய தம்மால் ஆய அர்ப்பணிப்புக்களை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. இவ் நிலையில் வட்டுக்கோட்டை இந்து வாலிபபர் சங்கம் இலங்கையின் பல பாகங்களிலும் தம்மல் ஆய பல முயற்சிகளை மேற்கொண்டு உதவிகளை வழங்கி வருவதும் இவ் இடத்தில் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்
இவ் செயற்பாடு ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு முன் உதாரணமான செயற்பாடாகவே அமைந்துள்ளது. சமூக பற்றுள்ளவர்கள் மூலம் பல இலட்சம் பெறுமதியான உதவிகளை இதுவரை பல துறை நோக்கியதாகவும் இவ் சங்கம் மேற்கொண்டுள்ளமை இவ் இடத்தில் குறிப்பிட முடியும் இவ்வாறான அமைப்புக்கள் வாயிலாக முன்பள்ளிகள் உதவிகளைப் பெற்று உயர்வடை முடியும். இன்றைய எமது சிறார்களே நாளைய எமது சுதந்திர பூமியின் உரிமையாளர்கள் இவர்களை உரிய முறையில் வரலாற்றைக் கற்றுக் கொடுத்து வளர்தொடுக்க வேண்டியது இன்றுள்ள அனைவரதும் மிக உயரிய கடமையாக உள்ளது. இவ் நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து உயர்த்துவோம் எனக் குறிப்பிட்டார்