தேர்தல் 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்பட்டியலின் கீழ் நடைபெறும்-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தல் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை வினவி, சகல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கட்சிகள் தனித்தோ, அல்லது கூட்டாகவோ தேர்தலில் போட்டியிடும் முறை குறித்து தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று ஆணையாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை வெளியீடு-

examகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதனிடையே பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதால், மீண்டும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீள ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. இதேவேளை, 5 ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம்திகதி நடைபெறவுள்ளதால், உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.