மகிந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி-விமல் வீரவன்ச-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிச்சயமாக போட்டியிடுவார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கூட்டணியிலேயே, தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள் சதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், அதன் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்தவுடன் பேசி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 1ஆம் திகதி அறிவிப்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
திருமலையில் இரண்டாம் நாள் சாட்சியங்கள் பதிவு-
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான இரண்டாம் நாளுக்குரிய அமர்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினத்திற்கான விசாரணைகளின் நிமித்தம் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பமன அமர்வில் சாட்சியமளிப்பதற்காக 179 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை, ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட காணாமற்போனோரின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பையேற்று வருகை தந்தவர்களில் 159 பேரிடம் நேற்று சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் இன்றைய தினம் புதிதாக 168 பேரின் முறைப்பாடுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் ஆரம்பம்-
பொதுத் தேர்தலுக்கான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 2000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட செலயகத்தில் இயங்கும் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானப் படையிலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு-
இலங்கை விமானப் படையில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான, பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2009 ஜூன் முதலாம் திகதி முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் தப்பி ஓடியவர்கள் பொது மன்னிப்பு காலத்தில் முறையாக விமானப் படையில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொது மன்னிப்பு காலம் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பொது மன்னிப்பை பெற விரும்புபவர்கள் காலை 09.00 மணிமுதல் மாலை 03.00 மணிவரை கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்திற்கு சென்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.