தேர்தலுக்காக 25,000ற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்-
எதிர்வரும் பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 15,000 கண்காணிப்பாளர்களை தாம் நியமிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தினை முழுமையாக கண்காணிப்பது தபால் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு தேர்தல் தினத்திற்கான கண்காணிப்பு மற்றும் நடமாடும் சேவைகளின் கண்காணிப்பு என நான்கு பிரிவின் ஊடாக தமது கண்காணிப்பாளர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை எதிர்வரும் தேர்தலின் நிமித்தம் 10,000 கண்கானிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். திறைமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாள் ரசங்க ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சின்னத்தை மாற்றுவதற்கு அனுமதி-
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 1981ஆம் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 12.1ஆம் பிரிவுக்கமைய இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். சின்னங்களை மாற்றுவது தொடர்பான குறித்த அறிவிப்புக்கள் கட்சியின் செயலாளர் ஊடாக எழுத்துமூலம் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்கள், ஏற்கெனவே கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. கட்டுப்பணத்தை அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை செலுத்தலாம். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும், செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் அலுவலக தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, பொதுஜன முன்னணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன். அதன் செயலாளராக பேராசிரியர் நாத் அமரகோன் செயற்படுகிறார். பொது பலசேனா இயக்கத்தின் அரசியல் முன்னணி, பொதுஜன முன்னணி கட்சியுடன் இணைந்து செயற்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதி-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில்115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலக நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.
சித்தன்கேணி வீதி திருத்தும் நடவடிக்கைகள்-
மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்த யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணி துறட்டிப்பனை ஆலயத்திற்கு செல்லும் வீதிய திருத்துவது தொடர்பில் அண்மைக்காலத்தில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாக தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.