சுதுமலை நாமகள் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)
யாழ். சுதுமலை நாமகள் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா சுதுமலை வடக்கு தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. திரு. ஜே.பாலேந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. பேரின்பநாயகம் (ஸ்தாபகத் தலைவர், நாமகள் பாலர் பாடசாலை) திரு. தனபால (கிராம சேவையாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பாலர் பாடசாலைச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் முன்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நாட்டிவைத்தார்.
இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
சிறுவர்களை கல்வி, பண்பாடு என்பவற்றிலே வளர்த்தெடுப்பது பாலர் பாடசாலைகள்தான். இன்று எங்களுடைய சமூகத்திலே ஒரு சிறு தொகையினர் மது, போதைப்பொருள் பாவனையிலும் சமூகச் சீர்கேடான விடயங்களிலும், ஈடுபடுவதனால் சமூகம் சீர்கெட்ட நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாள்வெட்டு கலாச்சாரம் அடிப்படையில் மது மற்றும் போதைப்பொருள் பாவனையால்தான் ஏற்படுகின்றது. இது உடனடியாக தீர்க்கப்பட முடியாவிட்டாலும், சிறுகச் சிறுக இதனைத் தீர்த்துவர வேண்டும். இதற்கு முன்னோடியாக இந்த ஆரம்பப்; பாடசாலைகளிலே கற்கின்ற குழந்தைகள் பண்புள்ள வருங்காலப் பிரஜைகளாக வருவதற்கு ஆரம்பப் பாடசாலைகள்தான் முனைப்போடு செயற்பட வேண்டும். பல பாடசாலைகள் அந்தச் சேவையினை மிகவும் நன்றாக செய்து வருகின்றன. வருங்கால சமூகம் மிகச்சிறந்த ஒரு சமூகமாக உருவாக வேண்டுமென்பதே எங்கள் அனைவரதும் அவாவாகும் என்று தெரிவித்தார்.